தோழர்களே.. “நிர்வாகிகளை இப்படியே அழையுங்கள்!” விஜய்யின் தவெக அறிவுறுத்தலுக்கு பின்னால் உள்ள அரசியல்
சென்னை: நடிகர் விஜய் சமீபத்தில் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இக்கட்சியின் நிர்வாகிகளை 'தோழர்' என்றே அழைக்க வேண்டும் என்று கட்சி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அழைப்பதற்கு எத்தனையோ சொற்கள் இருந்தாலும், தோழர் என்கிற சொல்லை தாவெக தேர்ந்தெடுத்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
தோழர் என்கிற சொல்லை எப்போதும் அதிகாரத்திற்கு எதிரானவர்களே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். 2017ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறை தோழர் என்கிற சொல்லை கண்டு வெளிப்படையாகவே அஞ்சியது. "உங்கள் குழந்தைகளை யாராவது போனில் அழைத்து, 'தோழர்' என்று பேசினால், உடனே அவர்களின் தொடர்புகளைத் துண்டிக்கச் செல்லுங்கள்" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தது அதிகார வர்க்கத்தின் பயத்தை காட்டியது.

இடதுசாரிகள்தான் தோழர் என்கிற சொல்லை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். 1917ம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு, ஆட்சியை லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். இதனையடுத்து அந்நாட்டின் வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. லெனின் மிகுந்த அதிகாரம் மிக்க தலைவராக இருந்தாலும் கூட, அவரை சக அதிகாரிகள் 'காம்ரேட்' என்றே அழைத்து வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அவரை விளிக்க 'காம்ரேட்' என்கிற சொல்லே பயன்படுத்தப்பட்டது.
திரு, திருமதி, மரியாதைக்குரிய, மாண்புக்குரிய, வணக்கத்திற்குரிய, அன்பிற்குரிய, ஸ்ரீ என பல சொல்லுக்கு பதில் 'தோழர்' என்ற ஒற்றை சொல் போதுமானது என ரஷ்யா சென்று திரும்பிய பின்னர் தந்தை பெரியார் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு திராவிட கட்சிகள் 'தோழரை' கைவிட்டிருந்தாலும், கம்யூனிஸ்ட்டுகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும், தமிழ் தேசியவாதிகளும் இந்த சொல்லை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது நடிகர் விஜய் தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் நிர்வாகிகள் தோழர்கள் என விளிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது. கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை என்றாலும், விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில விஷயங்கள் தவெக கட்சியின் நிலைப்பாட்டை ஓரளவு வெளிப்படையாக கூறியிருந்தன.
அதாவது, "'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்' ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் 'பிளவுவாத அரசியல் கலாச்சாரம்' மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற 'பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்' (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இது திராவிட மற்றும் இடதுசாரி கொள்கைகளோடு ஓரளவுக்கு ஒத்து போவதாக சிலர் கூறியிருந்தனர். இதனை உறுதி செய்யும் விதமாக, தவெக கட்சியின் நிர்வாகிகளை தோழர்கள் என அழைக்க வேண்டும் என்று தற்போது கட்சி அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications