அரசியல்வாதியாக விஜய்-க்கு முதல் பிறந்தநாள்.. ஜூன் 18ல் கூடும் தமிழக வெற்றிக் கழகம்.. முக்கிய முடிவு?
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் வரும் 18ஆம் தேதி பனையூரில் நடக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். நடப்பாண்டு பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்தடுத்து உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்திய பின், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டார். இதற்காக கட்சி நிர்வாகிகளை நியமித்து, விதிமுறைப்படி விளம்பரமாகவும் வெளியிட்டார்.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ளது. இதனால் லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தக்கட்ட பணிகள் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக நடிகராக மட்டுமே விஜய் பிறந்தநாளை கொண்டாடி வந்த நிலையில், முதல்முறையாக அரசியல் கட்சி தலைவராக கொண்டாடவுள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஜூன் 18ஆம் தேதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடக்கவுள்ளது.
சென்னை பனையூரில் நடக்கவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் நிர்வாகிகளை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது பற்றியும் ஆலோசிக்க உள்ளனர். கடந்தாண்டு சென்னையில் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், இம்முறை எந்த மாவட்டத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்படவுள்ளது. மேலும் விஜயின் பிறந்தநாளில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications