மலேசியாவில் இருந்து கடத்தப்பட்டு ஈரோட்டில் வளர்க்கப்பட்ட கிப்பான் குரங்கு! விக்ரமிடம் வந்தது எப்படி?
சென்னை: நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்ட லார் கிப்பான் குரங்குகள் மலேசியாவில் இருந்து கடத்தப்பட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வளர்க்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் அந்த குரங்குகளை வளர்த்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் முன்னணி நடிகர் சியான் விக்ரம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார். அவர் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு புதுவகையான குரங்குடன் அவர் விளையாடுவது போன்று இருந்தது.

இது வைரலானது. இந்த நிலையில் இந்த குரங்கு இந்தியாவில் இல்லை, எனவே சிக்கல் எழும் என விக்ரமின் நண்பர்கள் சொன்னதால் அவர் அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டார். எனினும் இந்த விவகாரம் வனத்துறையினருக்கு சென்ற நிலையில் அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில், மணிப்பூரைச் சேர்ந்த லைக்ராம் சிங் என்பவர் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 கிப்பான் குரங்குகள் தன்னிடம் இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் பரிவேஷ் எனும் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் இருந்து 3 கிப்பான்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு தத்தெடுப்பு முறையில் கொடுக்கப்பட்டதாம். அதில் ஒன்று இறந்துவிட்ட நிலையில் மற்ற இரு குரங்குகள் உயிருடன் இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் இருந்து 2 கிப்பான்கள் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சி.கே.ரங்கநாதன் என்பவருக்கு (இவரது மகனைத்தான் விக்ரம் மகள் திருமணம் செய்துள்ளார்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விற்பனைகளுக்கு வனத்துறையின் அனுமதி ஏதும் இல்லை என சொல்லப்படுகிறது.
வடமாநிலங்களின் எல்லையில் இந்த வெளிநாட்டு அபூர்வ வனவிலங்குகள் இந்தியாவிற்குல் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வனத்துறையினரும் இதை ஆராய்ந்து வருகிறார்கள்.
மேலும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரது வீட்டில், கடையில் ஏதாவது அரிய வகை உயிரினத்தை வைத்திருக்கிறாரா என சோதனை நடத்தப்பட்டது.
அது போல் ஒரு குரங்கு இறந்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விக்ரமுக்கும் வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 3 நாட்களுக்குள் அந்த குரங்கு எங்கிருக்கிறது, அவர் எங்கிருந்து எடுத்து வந்தார் என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. ஆசையாக விளையாடிய நிலையில் தற்போது விக்ரமுக்கு அதுவே வினையாகிவிட்டது.


Click it and Unblock the Notifications
