"கொட்டுனா வலிக்குமா".. தூய்மை பணி விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் யோகி பாபு
சென்னை: தூய்மை பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு மற்றும் ஒரு பள்ளி சிறுமி நடித்துள்ளனர். அந்த வீடியோவில், கொட்டுனா வலிக்குமா என்கிற தலைப்பில் நகைச்சுவையாகவும், மக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து கொட்டுவதன் முக்கியத்துவம் குறித்து ஆழமாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. தலைநகர் சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறுபக்கம் நகரங்களும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

மக்கும் குப்பை மக்காத குப்பை
இதில் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது குப்பைகளை நிர்வகிப்பது. மாநகராட்சி தொடங்கி ஊராட்சி வரை அனைத்து பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. களத்தில் தூய்மை பணியாளர்களும் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து போடுவதன் முக்கியத்துவம், திடக்கழிவு மேலாண்மையின் பலன்கள் அதிகளவு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இருப்பினும் பல நகரங்களில் குப்பைகளை சரியாக கையாளாமல் இருப்பதாகவும் புகார்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
விழிப்புணர்வு வீடியோ
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தூய்மைப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொட்டுனா வலிக்குமா, தூய்மை மிஷன் என்கிற பெயரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் யோகி பாபு மற்றும் ஒரு சிறுமி நடித்துள்ளனர். சுமார் 38 நொடிகள் அந்த வீடியோ ஓடுகிறது.
அதில், "கொட்டுனா வலிக்குமா.. வலிக்காதா." என்று யோகிபாபு சிறுமியிடம் கேட்கிறார். அதற்கு அந்த சிறுமி, "கொட்டுனா வலிக்கும்." என்று கூறுகிறார். அப்போது, யோகிபாபு உச்சுக் கொட்டுவிட்டு, "வலிக்காது மா" என்கிறார். சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த சிறுமி யோகிபாபுவின் தலையில் கொட்டிவிட்டு "வலிக்குதுல்ல" என்கிறார். அதற்கு, யோகிபாபு "கரெக்டா கொட்டினால் வலிக்காது." என்கிறார். அந்த சிறுமி "அப்போ இன்னொரு டைம் கொட்டவா" என்று கேட்கிறார்.
"ஏய்.. நான் குப்பையை கொட்டினால் வலிக்காதுனு சொன்னேன் மா. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து தனியாக கொட்டினால் வலிக்காதுனு சொன்னேன். புரியுதா.. இல்லையா." என்று கேட்டார். அதற்கு சிறுமி, "எனக்கு புரியுது. உங்களுக்கு புரியுதா." என்று கேட்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications