போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி! நீதிமன்றம் அதிரடி
சென்னை: போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2 பேருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமீன் மனுக்களை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், தனது குடும்பத்தில் நிறையப் பிரச்சினைகள் இருப்பதாலும், தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் கூறி ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதுபோல், தான் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகர் கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருந்தார்.

கொக்கைன் எனும் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுபோல், இதே வழக்கில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
போதைப் பொருளை தான் பயன்படுத்தியது ரத்த மாதிரிகளில் உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என நடிகர் கிருஷ்ணாவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதும் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் இருவருக்கும் ஜாமீன் கொடுக்கக் கூடாது என போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று மாலை தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த ஜூன் 24ஆம் தேதி யாரும் எதிர்பாராத நேரத்தில் போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முதலில் பயன்படுத்தவில்லை என மறுத்தார். பிறகு அவருக்கு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவர் கொக்கைனைப் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது.
இதுவரை ரூ. 4.72 லட்சத்திற்கு கொக்கைனை ஸ்ரீகாந்த் விலைக்கு வாங்கியது தெரியவந்தது. இதையடுத்துதான் அவர் கைது செய்யப்பட்டார். அதுபோல், கிருஷ்ணாவின் வழக்கை எடுத்துக்கொண்டால், அவருடைய ரத்த மாதிரியில் கொக்கைன் போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை.
அவருடைய இதயம் படபடப்பாக இருக்கும் என்பதால் போதைப் பொருளைத் தான் எடுத்துக்கொள்ள முடியாது என கிருஷ்ணா தெரிவித்தார். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு போதைக் கும்பலுடன் கிருஷ்ணாவுக்குத் தொடர்பிருந்ததால் அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், கிருஷ்ணா வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அதில் அவர் "கோடு வேர்டில்" உரையாடியிருக்கிறாராம். இந்த நிலையில், மேலும் சில நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் சிக்குவர் எனச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், இவர்களது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2 பேருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமீன் மனுக்களை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications