நடிகை அம்பிகாவுக்கு பெரிய மனசு.. மழையின்போது சென்னை மக்களுக்கு உதவ ஆர்வம்.. கமிஷனர் ஆபிஸில் பதிவு
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் வடகிழக்கு பருவமழையின்போது போலீசாருடன் சேர்ந்து தன்னார்வலராக பணியாற்றி சென்னை மக்களுக்கு சேவையாற்ற விருப்பம் தெரிவித்து நடிகை அம்பிகா சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து செல்போன் எண்ணை பதிவு செய்தது கவனம் பெற்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 16ம் தேதி தொடங்கிய பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது.

பொதுவாக சென்னையை எடுத்து கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பரில் அதிக கனமழை பெய்யும். குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டும் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை உள்பட மாநிலம் முழுவதும், மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் விஜயகுமார் நேற்று முன்தினம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ‛‛சென்னை போக்குவரத்து காவல்துறையில், மழை காலத்தில் தன்னார்வலர்களாக இணைய விருப்பமா?'' எனக்கேட்டு அதற்கான லிங்க்கை பகிர்ந்து இருந்தார். இதையடுத்து இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் தன்னார்வலர்களாக அந்த லிங்க் மூலமாக இணைந்தனர்.
Are u willing to join as volunteer in Greater chennai traffic police. join the whatsapp group.
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) October 21, 2025
சென்னை போக்குவரத்து காவல்துறையில், மழைகாலத்தில் தன்னார்வலர்களாக இணைய விருப்பமா? linkhttps://t.co/8gBudTfFQx @ChennaiTraffic #Traffic #chennai #GCTP
இந்த பதிவை பார்த்த நடிகை அம்பிகாவும் தன்னை தன்னார்வலராக இணைக்க முயன்றார். ஆனால் அவரால் சேர முடியவில்லை. இதனால் நடிகை அம்பிகா இன்று காலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனது செல்போன் எண்ணை வழங்கி தன்னார்வலராக சேர்த்து கொள்ளும்படி பதிவு செய்தார்.
அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் நடிகை அம்பிகா கூறுகையில், ‛‛நான் தன்னார்வலராக இணைய விரும்பினேன். லிங்க் மூலமாக குழுவில் இணைய முயற்சித்தேன். ஆனால் அதில் 1,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் சேர்ந்து விட்டனர். என்னால் சேர முடியவில்லை. இதனால் கமிஷனர் அலுவலகம் வந்து என்னை தன்னார்வலராக சேர்த்து கொள்ளும்படி பதிவு செய்துள்ளேன். இந்த மாதிரியான விஷயங்கள் வரும்போது நம்மால் முடிந்தவற்றை செய்யலாம். சின்ன விஷயம் செய்தாலும் அது துயரில் இருப்பவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications