காதல் தோல்வி, தற்கொலை முயற்சி! பின் 2 திருமணம் 2 விவாகரத்து! தமிழ் நடிகை சார்மிளாவுக்கு நடந்தது என்ன
சென்னை: தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலமாகப் பயணித்து வருபவர் நடிகை சார்மிளா.. தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் மலையாளத் திரையுலகில்தான் பரவலான அங்கீகாரத்தை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர், பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தார். அதே நேரத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை காதல், திருமணம், விவாகரத்து என பல்வேறு திருப்பங்களையும் சந்தித்தது.
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த "நல்லதொரு குடும்பம்" திரைப்படத்தின் மூலம் 1979ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சார்மிளா. அதன் பின்னர் 1991ஆம் ஆண்டு வெளியான ஒயிலாட்டம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதே 1991ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அவரது பயணம் தொடங்கியது.

நடிகை சார்மிளா
சிபி மலயில் இயக்கத்தில் மோகன்லாலுடன் தனம், பத்ரன் இயக்கத்தில் அங்கிள் பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதே ஆண்டில் பரதன் இயக்கிய கேலி திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படங்கள் மலையாள ரசிகர்கள் மத்தியில் சார்மிளாவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன. இதற்கிடையே சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது கடந்த காலம் குறித்து பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
1994ஆம் ஆண்டு வெளியான கடல் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் பாபு ஆண்டனியுடன் சார்மிளாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் ராஜதானி, கம்போளம் உள்ளிட்ட படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர். மொத்தம் ஆறு படங்களில் இணைந்து பணியாற்றியதாகவும், அந்த காலகட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் சார்மிளா கூறியுள்ளார்.
முதல் காதல்
அவர் மேலும் கூறுகையில், பாபு ஆண்டனி அமெரிக்கா சென்ற பின்னர் மீண்டும் திரும்பவில்லை என்றும் அவரது சகோதரர் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். பாபு ஆண்டனியை தான் மோசமான நபராக கருதவில்லை என்றும் தனது முதல் காதல் அவர்தான் என்றும் சார்மிளா குறிப்பிட்டுள்ளார். அந்த காதல் நிறைவேறாததால், தனது கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தனது தாயாரே தன்னை காப்பாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாபு ஆண்டனியுடன் நெருக்கமாக இருந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களையும் சார்மிளா நினைவுகூர்ந்துள்ளார். படப்பிடிப்பின்போது தனது அறையில் இருந்த ஹீட்டர் வேலை செய்யாத நிலையில், பாபு ஆண்டனி தனது அறையில் வெந்நீரை வாளியில் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதை பார்த்த தனது தந்தை கோபமடைந்து வாளியை தட்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோல பல நேரங்களில் தனது தந்தை பாபு ஆண்டனியை புறக்கணித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
விவாகரத்தில் முடிந்த திருமணம்
பாபு ஆண்டனியுடனான உறவுக்கு பிறகு, திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிஷோர் சத்யாவுடன் சார்மிளாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் மனதளவில் மிகவும் கடினமாக இருந்ததாகவும், கிஷோர் அன்புடன் தன்னிடம் பேசியதால் இருவரும் நெருக்கமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்துமாறு கிஷோர் கேட்டதாக சார்மிளா கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சேது திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும், தனது கணவர் விரும்பமாட்டார் என நினைத்து நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு கிஷோர் ஷார்ஜாவிலும், ஷார்மிளா இங்கும் இருந்துள்ளார். இருப்பினும் இருவருக்குமான உறவில் இடைவெளி ஏற்பட்டது. பின்னர் துபாயில் சந்தித்தபோது இந்த உறவை தொடர விருப்பமில்லை என கிஷோர் தெரிவித்ததாகவும் சார்மிளா கூறியுள்ளார். இதனால் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன நடந்தது
பின்னர் தனது சகோதரியின் நண்பரான ராஜேஷை சார்மிளா திருமணம் செய்து கொண்டார். தன்னைவிட எட்டு வயது இளையவரான ராஜேஷுடனான திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. தான் கிறிஸ்தவர் என்றும் தங்களது மகனுக்காக தான் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என ராஜேஷ் விரும்பியதாகவும் சார்மிளா கூறியுள்ளார். ஆனால், மகன் கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சட்டப்படி இருவரும் விவாகரத்து பெற்றிருந்தாலும், தங்களுக்குள் தொடர்பு இருப்பதாகவும், ராஜேஷ் மகனை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
