விஜய் தவெக மாநாடு.. செம்ம காண்டாகிப் போன திமுக.. கஸ்தூரி கச்சேரியில் திசைமாறியதால் ஹேப்பி ஜோர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது அரசியல் மாநாட்டை நடத்திய நாள் முதலே 'அரசியல் தீனியாக' இருந்து வருகிறார் நடிகர் விஜய். இதனால் ரொம்பவே திணறிப் போக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு (திமுக) தற்போதைய நடிகை கஸ்தூரியின் லாவணிக் கச்சேரி சற்றே நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. விஜய் மாநாடு குறித்த விவாதங்கள் அப்படியே நடிகை கஸ்தூரியின் 'காச்மூச்' 'தாட்பூட்' பேச்சு பக்கம் மொத்தமாக திரும்பிவிட்டன.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ட்விட்டரில் அறிவித்து 'நீண்ட இடைவெளி'க்குப் பின்னர் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தினார். விக்கிரவாண்டி மட்டுமல்ல விழுப்புரமே விக்கித்துப் போகும் அளவுக்கு பல லட்சம் பேரை திரட்டி 'மாஸ்' காட்டினார் நடிகர் விஜய். கூடுகிற கூட்டம் அத்தனையுமோ ஓட்டாகிவிடுமா? என்றால் தமிழ்நாட்டு சரித்திரம் "அப்படி எல்லாம் பேசப்படாது... கேட்கப்படாது" என்கிற 'லந்து' பாணி பதிலைத்தான் தருகிறது.

விஜய் மாநாட்டுக்கு எதிர்வினைகள்: விக்கித்துப் போனது விழுப்புரமும் விக்கிரவாண்டி மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகளும்தான் விஜய் நடத்திய மாநாடு, பேசிய பேச்சு, அறிவித்த கொள்கை மற்றும் செயல் திட்டங்களால் வாயடைத்துக் கிடக்கின்றன. எல்லோரும் பேசியதையே விஜய் பேசினார்.. எல்லா கட்சியின் கொள்கைகளைத்தான் விஜய் பேசினார்.. ஆக்கப்பூர்வமாக பேசவில்லை.. ராஜதந்திரத்துடன் கூட்டணி ஆட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.. அரைத்த மாவைத்தான் அரைக்கிறார் என ஏகத்துக்குமான விமர்சனங்கள் இடைவிடாமல் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மீது குவிந்து கிடக்கின்றன.
நாறிக் கிடக்கும் சமூக வலைதளங்கள்: சமூக வலைதளங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சியினருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் இடையேயான 'அரசியல் மாற்றம்' குறித்த அதீதமான உரையாடல்களை 'குடும்பத்தினருடன்' யாரும் படித்துவிட முடியாத 'தர்க்கங்களாக' தறுதலையாகத்தான் இருக்கின்றன.
வாரி அணைக்கும் அதிமுக: சரி பிரதான கட்சிகளான ஆளும் திமுகவும் அதிமுகவும் என்ன எதிர்வினையாற்றுகின்றன? நடிகர் விஜய் கட்சி தங்களுக்கு குழிதோண்டத்தான் வந்திருக்கிறது என்பதை நன்றாகவே உணர்ந்தும் கூட 'விழுந்தும் மீசையில் மண் ஒட்டலையே...' என்கிற பாணியில் விஜய்யை வாரி வாரி அணைத்துக் கொண்டிருக்கிறது அண்ணா திமுக.
இடைவிடாத விஜய் புராணம்: ஆளும் திமுகவோ, பழுத்த மரம்தான் கல்லடி படும் என்ற ஆதிகாலத்து வசனம் தொடங்கி 'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா காலத்து வசனம் வரை உச்சரித்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே விஜய் கட்சியால் வெலவெலத்துப் போய் கிடப்பது மூன்று கட்சிகள்தான். அண்ணா திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் ஆளும் திமுக. நாம் தமிழர் கட்சியும் அண்ணா திமுகவும் "விஜய் புராணத்தை' இடைவிடாமல் 'பாராயணம்' செய்து கொண்டே இருக்கின்றன.
விஜய் மீது செம்ம கடுப்பில் திமுக: ஆனால் தமது அரசியல் எதிரி 'திமுக'தான் பகிரங்கமாக விஜய் பிரகடனம் செய்துவிட்டதால் 'செம்ம காண்டில்' உறுமிக் கொண்டிருக்கிறது திமுக. இதனைத்தான் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வர்றவன் போறவன் எல்லாம்.. புதியதாக கட்சி தொடங்குகிறவன் எல்லாம் திமுக ஒழிய வேண்டும்.. அழிய வேண்டும் என நினைக்கின்றனர் என "ஒருமையில்" விஜய் வருகை குறித்து குமுறித்தள்ளினார். திமுகவின் 'பிரசார பீரங்கி' 'ஒற்றை நம்பிக்கை' 'எதிர்காலம்' என போற்றப்படுகிற துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினோ, இன்னும் காத்திரமான எதிர்வினையாற்றாமல் ரொம்பவே பம்மிப் பதுங்கிக் கொண்டுதான் இருக்கிறார். திமுகவைப் பொறுத்தவரை விஜய் கட்சியை பகிரங்கமாக எதிர்த்து பேசி 'வளர்த்துவிட' விரும்பவில்லை; ஆனால் கடந்த காலங்களைப் போல அல்லவே நிகழ்காலம்.. ஏதோ ஒருவகையில் விஜய் தொடங்கிவிட்ட தமிழக வெற்றிக் கழகம் குறித்து பேசித்தான் ஆக வேண்டும் என்கிற "இக்கட்டு முக்கட்டு" நிலையில் விழி பிதுங்கிக் கொண்டு நிற்கிறது திமுக.
கஸ்தூரியின் அடாவடி பேச்சு: இப்படி அரசியல் தெருவில் அங்கிட்டும் இங்கிட்டும் நகர முடியாமல் 'நடுவில்' நின்று கொண்டு 'அல்லு சில்லுகள்' ஆட்டத்தை 'உம்முனும் கம்முனும்' பார்த்துக் கொண்டிருந்த திமுக கொஞ்சம் மூச்சுவிடுவதற்கு இடம் கொடுத்துவிட்டார் நடிகை கஸ்தூரி. இப்போது 'அத்தனை கண்களும் கஸ்தூரி நோக்கி' 'அத்தனை கருத்துகளும் கஸ்தூரி நோக்கி, 'அத்தனை வசவுகளும் கஸ்தூரி நோக்கி' என்கிற அளவுக்கு திரும்பிய திசையெல்லாம் வெளுபட்டுக் கொண்டிருக்கிறார் ஆகாத வேதாந்தம் பேசிய நடிகை கஸ்தூரி. இந்த கஸ்தூரியின் விவகாரத்தில் திமுக ஒருவகையில் நிம்மதிப் பெருமூச்சும் விட்டுக் கொண்டிருக்கிறது.
கெட்டிப்பட்ட திமுக வாக்கு வங்கி: பிராமணியம், பார்ப்பனியம், வருணாசிரம தர்மம், சனாதன தர்மம் இவற்றை எதிர்த்துப் பேசக் கூடியவையாக திராவிடர் கழகம் மட்டும் இருந்த காலத்தை மலையேற்றி வைத்தார் திமுகவின் 'மாமன்னன்' துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இது திமுகவுக்கு வலிமையான ஆதரவையும் பெற்றுத் தந்தது. 'நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம்' என்கிற கதையாக இந்த சனாதன சச்சரவுகள்' அடங்கிப் போயிருந்த நிலையில் நடிகை கஸ்தூரி அம்மையார், திரியை நன்றாக திரித்து ஜெகஜோதியாக பற்றவைத்து விட்டு ஹைதராபாத்துக்குப் பறந்துவிட்டார். இப்போது விஜய் அடித்த மாநாட்டு புயல் மெல்ல மெல்ல கரை ஒதுங்கி 'திராவிடம்' 'திராவிடர் இயக்கம்' ' பார்ப்பனரல்லாத மக்களுக்கான திமுகவின் சாதனைகள்' 'திராவிட மாடல் அரசின் சாதனைகள்' என்கிறவை பட்டியல் போடப்பட்டு விவாதப் பொருளாகி திமுகவின் வாக்கு வங்கியை நிலைப்படுத்தி வைத்திருக்கிறது.
மகிழ்ச்சியில் திமுக: விஜய் வீசிய அஸ்திரம் ஆழமாக தரையில் ஊன்றி நிற்பதற்கு முன்னரே நடிகை கஸ்தூரி ஆரம்பித்து வைத்த 'லாவணி கச்சேரி' எங்கேயோ திசை திரும்பிப் போனதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறது திமுக என்பதுதான் யதார்த்தம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அது எப்படியோ, திமுக தடுமாறும்போதெல்லாம், காப்பதற்கு ஆளுநரோ, கஸ்தூரி வகையறாக்களோ சிக்கிவிடுகிறார்கள். பாவம் விஜய். ஒரு மாநாடு போட்டு ட்ரெண்ட் செய்த தனது பெயரை, கஸ்தூரி ஒரே பேச்சில் மறக்கடிக்கச் செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications