ஸ்ரீபிரியா கேட்ட 2 விஷயம்.. "அது ஒரு அபாய சங்கு.. குற்றங்கள், தண்டனைகளற்ற சமூகம் நோக்கி பயணிப்போம்"
கடலூர் சிறுமி போக்சோ வழக்கின் தீர்ப்பை நடிகை ஸ்ரீபிரியா வரவேற்றுள்ளார்
சென்னை: கடலூரில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், கடலூர் போக்சோ நீதிமன்றம் முன்மாதிரியானதோர் தீர்ப்பை வழங்கியுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்... அத்துடன், அந்த சிறுமிக்குக் கிடைக்கும் பத்து லட்சம் ரூபாய் தவிர்த்து, கல்வி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும், மனரீதியான சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்று 2 முக்கிய கோரிக்கைகளையும் ஸ்ரீபிரியா முன்வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்...
கடந்த 12.02.19 அவர் அதேபகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, குமாரக்குடியைச் சேர்ந்த திலகர் என்கிற குணசேகரன், கட்டமணியார் என்கிற ஜெயசங்கர் ஆகிய 2 பேரும் சிறுமியை வழிமறித்துள்ளனர்.

பலாத்காரம்
அருகிலிருந்த கோயிலின் பின்புறத்திற்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்... இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது நடந்ததை சிறுமி தன்னுடைய தாயிடம் சொல்ல, அதிர்ச்சியான அவர், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார்..

வழக்கு
இதையடுத்து, போலீசார் 2 பேரையும் போக்சோவில் கைது செய்தனர்.. மேலும் இது தொடர்பான வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்து வந்தது... இந்நிலையில், சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.. சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடுங்குற்றத்திற்காக 2 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு
மேலும் இவ்வழக்கில் சிறுமியைத் தாக்கிய திலகருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனையும், சிறுமியைக் கடத்திச்சென்ற குற்றத்திற்காகத் திலகர், ஜெயசங்கருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.

அறிக்கை
இந்த தீர்ப்பைதான் மநீம வரவேற்றுள்ளது.. அக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா இதுகுறித்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது: "கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, கடந்த 12-2-2019 அன்று இரண்டு சமூக விரோதிகளால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குணசேகரன் என்கிற திலகர் (வயது 34), கட்டமணியார் என்கிற ஜெய்சங்கர் (49) ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தீர்ப்பு
இந்த வழக்கு, கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவருக்கும் அவர்கள் மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது, இருவரும் ஆயுள் காலம் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இழப்பீடு
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டுமென்று சொல்லும் இத்தீர்ப்பு, முக்கியமான ஒன்றாக அமைகிறது. இதன் வாயிலாக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தீர்ப்பின் வழி அந்தச் சிறுமிக்குக் கிடைக்கும் பத்து லட்சம் ரூபாய் தவிர்த்து, கல்வி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

பயணிப்போம்
மேலும், மனரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது. பண்படாத சமூகத்தில் தண்டனைகள் வாயிலாகவே நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட இயலும் என்ற வகையில் இத்தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இனிவரும் காலங்களில் குற்றங்கள், தண்டனைகளற்ற லட்சிய சமூகம் நோக்கி நாம் மானசீகமாகப் பயணிப்போம். ஒருநாள் நிச்சயம் கண்டடைவோம்" என்று ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications