தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா ஆதவ் அர்ஜுனா?.. சென்னையில் நடிகர் விஜய்யுடன் திடீர் சந்திப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா திடீரென சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில், கூட்டத்துக்கு பின்னர் விஜய்யை ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இருந்தனர். ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றும், அதற்கான பணிகளை படிப்படியாக செய்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் வி சாலையில் நடத்தினார். அப்போது தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.

இதேபோன்று ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்றும் விஜய் கூறினார். இது திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்ததுபோல் இருந்தது. இந்த யூகத்துக்கு உயிர்கொடுக்கும் வகையில், அம்பேத்கர் நூல்வெளியீட்டு விழாவின் போது திருமாவளவனுடன் ஒரே மேடையில் விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்றால் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறிய திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும், வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூகம் வகுக்கக்கூடிய நிறுவனத்தின் தலைவருமான ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். அப்போது ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் திருமாவளவனுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் ஆதவ் அர்ஜுனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்று தகவல் பரவி வந்தது. இந்த நிலையில்தான், இன்று ஆதவ் அர்ஜுனா இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சென்று சந்தித்ததாகவும், அப்போது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், கட்சியினுடைய அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையிலும், அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த ஆலோசகராக ஆதவ் அர்ஜுனா செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசுவதற்காகதான் ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் விஜய்யை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வரும் பிப்ரவரி 2 ஆம்தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications