145 ஆண்டுகள் முன்னாடியா?.. 1876-ல் பொருநைக்கு வந்த ஜெர்மானியர் .. சரியாக ஸ்கெட்ச் போடும் மு.க.ஸ்டாலின்..
சென்னை: இந்தியாவில் நடைபெற்ற முதல் அகழாய்வு எது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் அதுதான் நிஜம். ஆதிச்சநல்லூரில் உள்ள பறம்பில் நடைபெற்ற அகழாய்வுதான் இந்தியாவுக்கே முன்னோடி.
இந்த அகழாய்வைச் செய்தவர் ஜெர்மன் நாட்டுக்காரர். பெர்லின் நகரைச் சேர்ந்த டாக்டர் ஜாகோர் என்பவர் 1876 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பறம்பில் மண்டிக் கிடந்த புதர் செடிகளை எல்லாம் அகற்றி, நிலத்தின் அடியில் புதையுண்டு கிடந்த பழம்பொருள்களைத் தேடி எடுக்கத் திட்டமிட்டார்.
பெர்லினிலிருந்து கப்பலில் இந்தியா வந்தடைந்த ஜாகோர், பின்னர் ரயிலில் பயணித்தார். அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியில் பயணம் செய்தார். இறுதியாகத் தென்கோடியிலிருந்த ஆதிச்சநல்லூரைப் போய்ச் சேர்ந்தார்.

அங்கு இவரால் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் இன்றும் பெர்லின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் மூலம் இந்திய மண்ணில் முதன்முதலாக அகழாய்வு விதையை விதைத்தார் ஜாகோர்.
அதனை அறிந்த அலெக்சாண்டர் ரீ என்பவர் இதே பகுதியில் இரண்டாம் கட்ட ஆய்வை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வு 1903-04ம் ஆண்டுகளில் நடந்தது. இவரது ஆய்வில்தான் மிகவும் பழமைவாய்ந்த மனித நாகரிகத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஈமக்காடு கண்டெடுக்கப்பட்டது.
இவரால் கண்டெடுக்கப்பட்ட அனைத்து தொல்பொருட்களும் இப்போதும் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் 50க்கும் மேலான களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்களை இவர் கண்டெடுத்தார். இவை தவிர இரும்பு கத்தி, குட்டையான வெட்டு வாள்கள், கைக் கோடாரிகள் போன்ற பொருட்களும் கூடவே மனித எலும்புகளும் மண்டை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவரால் எடுக்கப்பட்ட 2 மண்பானைகளின் உள்ளாக நெல் உமிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகள் கழித்து அவை மீட்டு எடுக்கப்பட்டன.
இவரைப் போலவே எம்.லூயிஸ் லேபிக் என்பவர் இதே காலகட்டத்தில் ஆய்வு செய்து கூடுதல் தகவல்களைத் திரட்டினார். இவர் பாரீஸ் நகரத்தைச் சேர்ந்த ஆய்வாளர்.

அலெக்சாண்டர் ரீ தனது கண்டுபிடிப்பில் கிடைத்த பொருட்களை 1913-ல் ஒரு பட்டியலாகத் தயாரித்து வெளியிட்டார். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்த எண்டர்சன் முன்னுரையுடன் 'Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair' என்ற தலைப்பில் அலெக்சாண்டர் ரீயின் பட்டியல் வெளிவந்தது.
ஆங்கிலேயர்களே இந்தளவுக்கு வியந்து பார்த்த ஆதிச்சநல்லூர் எங்கே இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அதாவது பாளையங்கோட்டையிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் தண்பொருநை ஆற்றின் தென்கரையில்தான் இது உள்ளது.
ஆதிச்சநல்லூரில் பறம்பு எனச் சொல்லப்படும் மண்மேடு தண்பொருநை ஆற்றின் தென் கரையில் தெற்கு வடக்காகப் பரவிக் கிடக்கின்றது. இதன் மொத்த பரப்பளவு 114 ஏக்கர். இந்த நிலம் பயிர்த் தொழிலுக்குப் பயன்படுவதில்லை என்பதால் இதற்குப் பறம்பு எனப் பெயர் வந்தது என்கிறார்கள் அகழாய்வில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள்.

ஆகவேதான், அன்றைக்கு வாழ்ந்த பழந்தமிழர்கள் இந்தப் பகுதியை ஈமக்காடாக பயன்படுத்தி வந்துள்ளனர். இங்கே கணக்கில் அடங்காத அளவுக்கு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாழிகள் தரையிலிருந்து 3 அடி ஆழம் முதல் 12 அடி ஆழம் வரை புதைக்கப்பட்டிருப்பது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒன்றின் மீது ஒன்றாகத் தாழிகள் அடுக்கப்பட்டுள்ளதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் வரலாற்றுக் காலத்திற்கு முன்னதான ஈமக்காடு பகுதிகளில் இதுவே பெரியதாகும்.
இந்த ஈமத்தாழிகளில் உயர்தர வெண்கலம், இரும்பு தாதுப் பொருள்களான கிண்ணங்கள் என பலதையும் வைத்து அக்கால தமிழர்கள் தங்களின் மூதாதையர்களைப் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இங்கே தங்கத்தினால் செய்யப்பட்ட பட்டங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைவிடச் சிறப்பான ஒரு வரலாற்று உருவம் ஒன்றும் இந்த ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஆய்வில் பெரும் திருப்பமாக அமைந்தது. சிந்துவெளி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் உருவத்தைப்போன்றே ஆதிச்சநல்லூரிலும் ஒரு பெண் உருவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளார்கள்.
இதனுடன் பல வடிவங்களில் ஆன வெண்கலப் பாத்திரங்களையும் எடுத்துள்ளனர். இரும்பு ஆயுதங்கள் என எடுத்துக் கொண்டால் எறிவேல், ஈட்டி, குத்துவாள், அம்புமுனை வடிவில் ஈட்டி, மூவிலை வேல், கூர்மையான அம்புமுனை, கைக்கோடாரி, வாள், வளைந்த கத்தி, இருவளைவான கொக்கித் தடி, பலி வாள், அம்புமுனை, கோடாரிகள், பல போர்க் கருவிகள், ஆபரணங்கள், அணிகலன்கள், விலங்கு பொம்மைகள் என நூற்றுக்கணக்கானவை இதுவரை கிடைத்துள்ளன. ஆகவேதான் இதைத் தமிழர் பண்பாட்டின் தொட்டில் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதை உணர்ந்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 33 கோடி ரூபாயில் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார். அதன் மாதிரி வடிவத்தையும் அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது கீழடிக் காட்சியகத்தைப் போன்றே நாட்டுக்கோட்டைக் கட்டட கலைவடிவில் கட்ட உள்ளனர்.

இந்தக் காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட உள்ளன. ஏறக்குறைய 13 ஏக்கர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் மிகப் பிரம்மாண்டமாக அமைய உள்ளது.
பொருநை அருங்காட்சியகம் குறித்து பேசியிருக்கும் வரலாற்று ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு, "இந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடந்து கிட்டத்தட்ட 145 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இதன் பெருமையை உலகம் அதிகம் உணரவில்லை. அதன் பெருமையை உணர்ந்து ஒரு புதிய இலக்கணத்தை வகுக்கும் விதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்துள்ளார். அதற்கு மிகப் பெரிய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்பு 2004- மிகப் பெரிய அகழாய்வு நடந்தது. அதன் அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. நீதிமன்றம் மூலம் ஒன்றிய அரசிடம் மூன்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில் ஒன்று அருங்காட்சியகம் அமைப்பது. அப்படிப் பார்த்தால் நாங்கள் வைத்த 3 கோரிக்கையும் நிறைவேறிவிட்டது. இது எங்களின் நீண்ட கால கனவு. அதை நிறைவேற்றித் தந்துள்ள முதல்வருக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இதில் இன்னொரு விஷயத்தை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஒன்றிய அரசால் பாதியில் கைவிடப்பட்ட அகழாய்வை, தமிழ்நாடு அரசு கையில் எடுத்து மிகச் சிறப்பாக நடத்தியது.
அதன்மூலம் பெரும் ஈமக்காடும் அதைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வரலாற்று உண்மைகளும் இன்றைக்கு வரலாற்று ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் நாகரிகம் பழமையானது என்பதை எடுத்துக் கூற இந்த அருங்காட்சியகம் இருக்கப் போகிறது" என்று உணர்வு பொங்க கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications