சீனாவுக்கே டஃப் கொடுக்கும் ஆதித்யா எல் 1.. முதல் சுற்று பயணம் வெற்றி! அசத்திய இஸ்ரோ
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் முதன் முறையாக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், தனது முதல் சுற்று பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. அதாவது ஒளிவட்ட பாதையை நிறைவு செய்திருக்கிறது என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
இந்திய விண்வெளி துறையில் சந்திரயான் 3க்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன், ஆதித்யா எல்-1 தான். இதற்கு முன்னர் இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய எந்த விண்கலமும் அனுப்பப்படவில்லை. ஆதித்யா எல்-1 தான் முதல் விண்கலம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், சுமார் 127 நாட்கள் பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு சமீபத்தில்தான் நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது செயல்பட தொடங்கின. அதாவது, சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) மற்றும் விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) ஆகிய கருவிள் சூரிய புயல்களை தெளிவாக படம்பிடித்திருந்தது. கடந்த மே மாதம் 10-11 தேதிகளில் சூரியனிலிருந்து சூரிய புயல் வெளிவந்தது. இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனை சர்வதேச நாடுகளை சேர்ந்த விண்கலன்கள் படம் பிடித்தன. ஆனால் ஆதித்யா எல்-1-ஆல் படம் எடுக்க முடியவில்லை.
இருப்பினும் மே 14ம் ஆதித்யா எல்-1-ன் SUIT மற்றும் VELC கருவிகள் சூரிய புயல்களை பல்வேறு கோணங்களில் தெளிவாக படம்பிடித்தது. இதில் சூரியனின் காந்த பகுதிகளை தெளிவாக பார்க்க முடிகிறது. அதேபோல சூரிய புள்ளிகள் உள்ளிட்டவற்றையும் ஆதித்யா தெளிவாக படம் பிடித்திருந்தது. இதற்கு முன்னரும் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல சூரிய புயல்கள் வெளியாகியிருந்தன. அப்போதும் பாபா(PAPA) எனும் கருவி அதை தெளிவாக படம்பிடித்திருந்தது.
இப்படியாக சூரியனை ஆய்வு செய்யும் வேலையை ஆதித்யா மிகச்சரியாக செய்து வருகிறது. சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள் செல்ஃபோன் தொடங்கி, டிவி, கம்ப்யூட்டர் என எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களையும் முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரானிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக பேரழிவு ஏற்படும்.
எனவே இந்த பேரழிவை முன்கூட்டியே கண்காணிக்க கரோனல் மாஸ் எஜெக்ஷனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த பணியைதான் இந்தியாவின் ஆதித்யா எல்1 வெகு சிறப்பாக செய்து வருகிறது.
இந்நிலையில் ஆதித்யா எல்-1 தனது முதல் சுற்று பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. அதாவது, ஒளிவட்ட பயணத்தை ஆதித்யா வெற்றிகரமாக முடித்திருக்கிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது. ஆதித்யா எல்-1 எங்கு பயணத்தை தொடங்கியதோ அதே இடத்திற்கு 178 நாட்கள் கழித்து மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது.
இந்த ஒரு சுற்று பயணத்திலேயே ஏராளமான தகவல்களை ஆதித்யா எல்-1 சேகரித்து கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அடுத்த சுற்றுகளில் மேலும் அதிகமான தகவல்களை ஆதித்யா சேகரித்து தரும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆதித்யா எல்-1 வெற்றி மூலம் சூரியனை ஆய்வு செய்யும் சர்வதேச நாடுகளின் தரத்திற்கு இந்தியா உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக விண்வெளித்துறையில் சீனாவுக்கு இந்த மிஷன் மூலம் இந்தியா போட்டியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் சீனாதான் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறது. ஆனாலும், சூரியனை ஆய்வு செய்ய கடந்த 2021ம் ஆண்டுதான் முதல் விண்கலத்தை சீனா அனுப்பியது. CHASE என்கிற இந்த விண்கலம் சூரியனிலிருந்து வரும் காந்த புயல்களை ஆய்வு செய்யும்.
ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா ஆதித்யா எல்-1ஐ அனுப்பியது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் சூரியன் குறித்த ஆய்வை சீனா அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications