10 நாளா தண்ணீர் வரலைன்னு கேட்டா சரமாரியா அடிப்பீங்களா? துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்
சென்னை: 10 நாட்களாக தண்ணீர் வரலைனு தொகுதி மக்கள் கேட்டா அடிப்பீர்களா என துறையூர் தவெக எம்எல் ரவிசங்கரின் தாக்குதல் குறித்து அதிமுக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஒரு எம்எல்ஏ என்பவர் எல்லைக் காப்பாளன் என கிளாஸ் எடுத்த முதல்வர் விஜய் இப்போது என்ன செய்ய போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் கட்சியின் துறையூர் "எல்லைக் காப்பாளர்" மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா? உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?
மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்! ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை! இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா விஜய்? என அந்த பதிவில் கேள்வி எழுப்பப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம், சரியாக இல்லை என்றும் தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து துறையூர் எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கரை நேரில் சந்தித்து மனு அளிக்க கார்த்திக் குமார், மணச்சநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றாராம். அப்போது அவரிடம் மனு கொடுத்த போது ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு கார்த்திக் குமாரை துணை சபாநாயகர் ரவிசங்கர் சரமாரியாக தாக்கியதுடன் ஆபாசமாக பேசினாராம்.
அவரை எட்டி உதைத்ததில் காயம் ஏற்பட்டு மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் விவகாரம் இணையத்தில் பரவி வருகிறது. இது ரவிசங்கர்தானா என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும் கண்டனங்கள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications
