சிவி சண்முகம் பக்கம் 30 MLAகள்.. தனித்து விடப்படும் எடப்பாடி? புதுச்சேரி ரிசார்ட்டில் ரகசிய டீல்
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது ஒரு சதுரங்க வேட்டையாக மாறியுள்ளது. 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், மேஜிக் நம்பரை எட்ட முடியாமல் விஜய் தவித்து வருகிறார். இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்களில் கிட்டத்தட்ட 3ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் தவெகவுடன் கை கோர்க்க ரெடியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு, விஜய் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், நம்பர் கேம் விஜய்க்கு சவாலாக மாறியுள்ளது.

அதிமுகவின் 30 எம்எல்ஏக்கள்
இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தரலாம் எனச் சொல்லப்படுகிறது. சி.வி.சண்முகம் தலைமையில் இதற்காக எம்எல்ஏக்கள் திரண்டுள்ளனர். அதிமுகவின் 47 எம்.எல்.ஏக்களில் சுமார் 30 பேர் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர்களில் பலர் புதுச்சேரி ரிசார்ட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது தவெகவுக்கு ஆதரவு வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அதை வெளிப்படுத்தும் விதமாகவே அதிமுகவின் கே.பி. முனுசாமி ஆகியோர் "எந்தச் சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை" என்று திட்டவட்டமாக மறுத்தார்.. ஆனால், அதையும் தாண்டி சிவி சண்முகம் இந்த காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறாராம்.
பேச்சுவார்த்தை
துணை முதல்வர் மற்றும் அமைச்சரவையில் முக்கிய இடங்கள் கொடுத்தால் ஓகே என்ற முடிவில் சிவி சண்முகம் இருக்கிறாராம். இது தொடர்பாக தவெக நிர்வாகியும் மாஜி அதிமுக சீனியர் தலைவருமான செங்கோட்டையனிடம் பேசி வருகிறாராம். இப்படி நொடிக்கு நொடி தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் விஜய்க்கு நம்பர் கேம் தான் சிக்கலாக இருக்கிறது.
தவெக பலம்
ஏனென்றால் தவெகவிடம் 108 இடங்கள் இருந்தாலும், அதன் உண்மை பலம் 106 மட்டுமே. ஏனென்றால் இரண்டு தொகுதிகளில் வென்றுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபாநாயகர் வாக்களிக்க முடியாது. இப்படி இரு எம்எல்ஏக்கள் ஏற்கனவே அவுட்.!
தற்போது ஆதரவு தந்துள்ள காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்களை சேர்த்தால் தவெக நம்பர் 111ஆக இருக்கும். ஒருவேளை இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் (தலா 2 எம்எல்ஏக்கள்) தவெக பக்கம் வந்தால்.. விஜய்யின் பலம் 117 ஆக உயர்கிறது. இது ஒரு 'டை' (Tie) நிலை! இந்தச் சூழலில், சபாநாயகர் வாக்களித்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். ஆனால், ஒரு நபர் மாற்றி வாக்களித்தாலும் ஆட்சி கவிழும் என்பதால் விஜய் இந்த ரிஸ்க்கை எடுப்பாரா என்பது சந்தேகம் தான்.!
தமிழ்நாடு தேர்தல்
தமிழ்நாடு தேர்தலைப் பொறுத்தவரை 108 இடங்களில் வென்று விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக தேர்தலைச் சந்தித்த 59 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்து உடன் தேர்தலை எதிர்கொண்ட அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வென்று 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications