முஸ்லிம் உரிமைகளை பறிக்கிறது.. வக்பு மசோதாவை உடனே ரத்து செய்யுங்கள்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசு இன்று கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருதத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வக்பு வாரிய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நமது நாட்டில் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களுக்காக பலரும் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளனர். இந்த நிலங்கள் வக்பு வாரிய சொத்துகள் எனப்படுகின்றன. இதை நிர்வகிப்பது குறித்து 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்களும் அமைக்கப்பட்டன. இந்த வக்பு வாரியங்கள் தான் வக்பு சொத்துகளைக் கண்காணிக்கும்.
வக்பு சட்டம்: இது தொடர்பான விரிவான சட்டம் 1995ல் கொண்டு வரப்பட்ட நிலையில், தொடர்ந்து 2013இல் இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் வக்பு வாரியங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்பட்டது. இதற்கிடையே இப்போது மத்திய அரசு வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள முயல்கிறது.
மத்திய அரசு: இதில் மொத்தம் 40 திருத்தங்கள் உள்ளன. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ இன்று தாக்கல் செய்தார். இருப்பினும், இந்த லோக்சபாவிலேயே மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், மஜ்லீஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேநேரம் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஷிண்டே சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தொடர்பாக இன்று அனல் பறக்க விவாதங்கள் நடந்தன. இதையடுத்து இதன் அமைச்சர் கிரண் ரிஜுஜூ இந்தச் சட்டம் தொடர்பாக விளக்கமளித்தார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளது. வரும் நவ. மாதம் நாடாளுமன்றம் கூடும் போது இது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்: அதேநேரம் இந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றே எதிர்க்கட்சி எம்பிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியுள்ளார். வக்ஃப் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், முஸ்லீம்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் உள்ளது என்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் வக்ஃப் வாரியத்தை நிர்வகிக்க ஒப்புதல் அளிப்பது ஏற்புடையதல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது. முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. மட்டுமின்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல.
ரத்து செய்ய வேண்டும்: வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் மாநில அரசின் பணிகளைப் பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications