"சிவி சண்முகம் பேச்சு மோசமானதுதான், ஆனால்.. " போலீசாரிடம் மிக முக்கிய கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்
சென்னை: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது சிவி சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் என்று நீதிபதி தெரிவித்தார். அதேநேரம் போலீசாரிடம் சில கேள்விகளை எழுப்பிய அவர், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாகப் பேசியதாக திமுகவினர் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு: அந்த புகாரின் அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவது, அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும் உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக சி.வி. சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே திண்டிவனம் மற்றும் விழுப்புரம் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
வாதம்: அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.வி.சண்முகம் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றால் தமிழக அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும்... ஆனால், திமுக நிர்வாகி இந்த புகாரைக் கொடுத்துள்ளார் என்ற வாதத்தை முன்வைத்தார்.
மோசமானது தான்: இதையடுத்து சென்னை ஐகோர்ட் நீதிபதி, "சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான்.. அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆனால் இந்த பேச்சுக்கு மோதலை ஏற்படுத்துவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
போலீசார் விளக்கம்: அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியல் தளத்தில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியது தொடர்பாகக் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்கு பேர் புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியது மற்றும் போராட்டம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications