'இது ஒரு விடியாத அரசு.. மீனவர் நிவாரணத்தில் காலம் தாழ்த்தும் திமுக அரசு.. ' ஜெயக்குமார் பாய்ச்சல்
சென்னை: திமுக அரசை விடியாத அரசு என விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த அரசு மீனவர்கள் கஷ்டத்தைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் மீனவ நலச் சேமிப்பு நிவாரணம், மழைக்கால நிவாரணம் என எதையும் மீனவர்களுக்கு வழங்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது 2 பேரைக் கொண்ட மீனவ குடும்பங்களுக்கு மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் தீபாவளிக்கு முன்னதாகவே வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போது தீபாவளிக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் திமுக அரசு இந்த நிவாரண தொகையை மீனவர்களுக்கு அளிக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசை விடியாத அரசு என்றும் அவர் சாடியுள்ளார்.
|
ஜெயக்குமார் ட்வீட்
இது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டரில், "அதிமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முன்பாகவே மீனவ நலச் சேமிப்பு நிவாரண ஆண்களுக்கு 4500 ரூபாய் ,பெண்களுக்கு 4500 ரூபாய் மற்றும் மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் என 14 ஆயிரம் ரூபாய் 2 பேர் கொண்ட ஒரு மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியது.

நிவாரணம் எப்போது
ஆனால், தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இதுவரை எந்த நிதியும் அறிவிக்காதது மீனவர்களைத் தீபாவளி கொண்டாட இயலாத சூழலுக்குத் தள்ளி இருக்கின்றது. மீனவர்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத திமுக அரசு எப்பொழுது நிவாரணம் வழங்கும். பதில் சொல்?" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சி
அந்த வீடியோவில் ஜெயக்குமார், "மீனவ நலச் சேமிப்பு நிவாரண திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், அதுவும் மீனவ கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலா 4500 ரூபாய் விகிதம் மொத்தம் 9000 ரூபாய் தீபாவளிக்கு 10 நாட்கள் முன்னதாக அதிமுக அரசில் வழங்கப்படும். பொதுவாக மழைக்காலங்களில் மீனவர்களால் கடலுக்குச் செல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் தீபாவளிக்கு முன்னதாகவே வழங்கப்படும்.

விடியாத அரசு
இதன் மூலம் மீனவ குடும்பங்களால் எவ்வித சிக்கலும் இன்றி தீபாவளியைக் கொண்டாட முடிந்தது. ஆனால், இந்தாண்டு தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த விடியாத அரசு இது குறித்துக் கண்டுகொள்ளவில்லை. மீனவர்களுக்கு வர வேண்டிய பணத்தைக் கூட வங்கிகளில் செலுத்தாமல் வஞ்சிக்கிறது. மீனவர்களின் கஷ்டத்தை இந்த அரசு காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

நடவடிக்கை தேவை
இதன் பிறகாவது திமுக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். மீனவ நலச் சேமிப்பு நிவாரணம், மழைக்கால நிவாரணம் என இரண்டையும் மீனவர்களுக்கு உடனடியாக இந்த அரசு வழங்க வேண்டும். அப்போது தான் மீனவர்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும்" என திமுக அரசை ஜெயக்குமார் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications