அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணிக்கு உடல்நலக் குறைவு! நள்ளிரவில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் -உடல்வலி: அதிமுகவில் உள்ள பவர்ஃபுல் நிர்வாகிகளில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஒருவர். எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா வகையிலும் உதவிக்கரமாக இருக்கக் கூடியவர். அதேபோல் டெல்லியிலும் தனி லாபி செய்யக்கூடியவர் தங்கமணி. இந்நிலையில் இவருக்கு கடும் காய்ச்சலும், மிகுந்த உடல் சோர்வும் ஏற்பட்டதை அடுத்து வீட்டிலேயே அதற்கான மருந்து உட்கொண்டிருக்கிறார். ஆனால் உடல் வலியும், காய்ச்சலும் குறைந்தபாடில்லை.

நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி: கூடவே கடும் குளிரும் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து தான் நேற்று நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற தங்கமணி, மருத்துவர்கள் அறிவுரைப்படி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளாலும், நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையிலும் டெங்கு காய்ச்சலாக இருக்கலாமோ என சந்தேகிக்கிப்படுகிறது. மருத்துவர்கள் குழு முன்னாள் அமைச்சர் தங்கமணி உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஊரெங்கும் காய்ச்சல், சளி, இருமல்: தற்போது மழைக்காலம் என்பதால் ஊரெங்கும் காய்ச்சல், சளி, இருமல் என பரவலாக பாதிப்பு காணப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினே வைரஸ் ப்ளூ காய்ச்சலாலும், தொடர் இருமலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வருகிறார். அதேபோல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இன்னார் என்று யாரையும் பார்த்து நோய் வராது.
தங்கமணி நலம்: இதனிடையே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி நலமுடன் இருப்பதாகவும் உரிய மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. தங்கமணியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் நலம் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும் சிறிய அறுவைச் சிகிச்சை காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications