அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் பாஜகவே அதனை வழிநடத்தும் - பெ.சண்முகம் விமர்சனம்
சென்னை: திமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும். அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வருகின்றனர். பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. தமிழக அரசியல் களம் இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் களம் காண்கின்றன. இதனுடன் தவெக, நாம் தமிழர் கட்சிகளும் போட்டியில் உள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டனர். தவெக சார்பில் கூட்டணி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியுடன் ஒப்பிடும்போது, அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் அதிமுக கூட்டணியில் தினசரி பல்வேறு பிரச்சனைகள் வெடித்து கொண்டிருக்கிறது.
கூட்டணியில் இருந்து வெளியேற்றம்
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறியது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தது, தொடர்ந்து அவர் கட்சிப் பொறுப்புகளில் பறிக்கப்பட்டது என அதிரடி திருப்புமுனைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அதிமுகவில் விவாதத்தைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டார்.
அதிமுகவை இயக்கும் பாஜக
அதிமுகவில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும். அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வருகின்றனர். எனவே பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
அதிமுக எத்தனை கோஷ்டிகளாக பிரிந்தாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான். மோடியா லேடியா என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக இயக்கம் இன்றைக்கு 'அண்ணன் அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நடப்போம்' என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத் தான் இந்த டெல்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications