"எதிரும் புதிரும்.!" ஒரே மாவட்டத்தில் அங்க எடப்பாடி.. இங்க ஓபிஎஸ்.! திணறிப்போன திண்டுக்கல் அதிமுக
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் முடிவுக்கு வராத நிலையில், எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸும் இன்று ஒரே நாளில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே தொடர்ச்சியாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும் என்ற சர்ச்சை இன்னும் முடியவில்லை..
ஒற்றை தலைமையே ஒரே தீர்வு என எடப்பாடி திட்டவட்டமாகக் கூற, கூட்டுத் தலைமையே அதிமுகவுக்கு ஏற்றது என அழுத்தமாகக் கூறுகிறார் ஓபிஎஸ். இதனால் தொண்டர்கள் குழம்பியுள்ளனர்.

அதிமுக
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி, இது அத்தனையும் தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதன் பின்னர் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் அடுத்தடுத்து இரண்டு பொதுக்குழுக் கூட்டங்கள் நடந்தன. இதில் கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்,

நீதிமன்றம்
மேலும், ஓபிஎஸை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர். இருப்பினும், அந்தப் பொதுக்குழுவே செல்லாது என்ற சொன்ன ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கினார். மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி ஓபிஎஸுக்கு சாதகமாகத் தீர்ப்பு அளித்தாலும், மேல்முறையீட்டு மனுவில் சென்னை ஐகோர்ட் எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தது.

எடப்பாடி பழனிசாமி
எனவே, தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். பொதுக்குழுவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதன் மூலம், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்ற சூழல் உருவாகி உள்ளது. இருப்பினும், சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ்! அங்கு தனக்கு நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறார்.

ஒபிஎஸ்
சட்டப் போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், மறுபுறம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் ஓபிஎஸ்! குறிப்பாக சசிகலா, தினகரன் உடனும் இணைந்து பணியாற்ற அவர் சம்மதித்து உள்ளார். எடப்பாடியை எதிர்க்கவே ஓபிஎஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதை நேரம் இதை முற்றாக நிராகரிக்கும் எடப்பாடி, ஒற்றை தலைமையைக் கட்சிக்குத் தீர்வு என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார்.

திண்டுக்கல்
இப்படி அனைத்து விஷயங்களிலும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாகவே உள்ளனர். இந்தச் சூழலில் இரு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர்கள் இருவருமே இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் முகாமிட்டனர். கட்சியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் திண்டுக்கல் சென்ற எடப்பாடி ஒட்டன்சத்திரம் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிலும் கலந்து கொண்டார்.

உருகிய எடப்பாடி
அப்போது அதிமுகவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்று கூறிய அவர், தான் பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை போராடிக் கொண்டு இருப்பதாகவும் ஆட்சியில் இருக்கும் போதில் தொடர்ந்து இப்போது வரை அதுவே தொடர்வதாகத் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எடப்பாடி இப்படிப் பேசிக் கொண்டிருக்க, மறுபுறம் அதே மாவட்டத்தில் இன்னொரு பக்கம் முகாமிட்டிருந்தார் ஓபிஎஸ்!

ஓபிஎஸ் ஆலோசனை
பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ், அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ஓபி. ரவீந்திரநாத் நேற்றே பழனிக்குச் சென்றார். அங்குத் தங்கரதத்தை இழுத்து முருகனை வழிபட்டார். நேற்று ரவீந்திரநாத் முருகனை வழிப்பட்ட நிலையில், இன்று ஓபிஎஸும் பழனியில் சுவாமி தரிசனம் செய்தார்.

திணறிய திண்டுக்கல்
எல்லா விஷயங்களில் எதிரும் புதிருமாக உள்ள எடப்பாடியும், ஓபிஎஸும் ஒரே நாளில் திண்டுக்கல் வந்ததால் அதிமுக தொண்டர்களே சற்று ஜெர்க் ஆகிவிட்டனர். எடப்பாடி ஆதரவாளர்கள் அவரை வரவேற்கச் சென்றிருந்த நிலையில், மறுபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பழனியில் அவருடன் ஆலோசனை நடத்தினர். இதனால் திண்டுக்கல் அதிமுகவே இன்று ஒரு வழியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications