Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக - பாஜக கூட்டணி.. உறவும் பிரிவும் 2019 முதல் 2023 வரை நடந்தது என்ன? டைம் லைன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனியும் பொறுக்க முடியாது என்று பொங்கி எழுந்த அதிமுக பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது. அதிமுகவினர் இதை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஒரு கூட்டணியில் இருந்து விலகியதற்காக இப்படி கொண்டாட்டம் நடைபெறுவதை அரசியல் நோக்கர்கள் அதிசயமாகவே பார்க்கின்றனர். 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை அதிமுக பாஜக கூட்டணியில் நடந்தவைகளை பார்க்கலாம்.

அதிமுக - பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் பிள்ளையார் சுழி போட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். அவர் தான் முதன் முறையாக, அதிமுக கூட்டணியில் போட்டியிட பாஜகவுக்கு 1998ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு அளித்தார். அப்போது அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டது.

ADMK VS BJP: AIADMK-BJP Alliance and Division What happened from 2019 to 2023? Time line

1998 லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக முதன்முறையாக இடம் பெற்றது. இதில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அந்த கட்சி 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. அவற்றில் 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. நீலகிரியில் போட்டியிட்ட மாஸ்டர் மதன், கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சியில் போட்டியிட்ட ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் வெற்றி பெற்று பாஜக எம்.பிக்களாக லோக்சபாவிற்கு சென்றனர்.

அதிமுக - பாஜக உறவில் வாஜ்பாய் காலத்திலி்ருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 1999ஆம்ஆண்டு பாஜக கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றார் ஜெயலலிதா. இதன் மூலம் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணியின் 13 மாதங்கள் ஆட்சி கவிழ்ந்தது. பாஜக உடன் திமுக இணைய அதுவே காரணமாகி விட்டது.

இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி உருவானது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால், அவை அனைத்திலும் பாஜக தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2011-ம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.

2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக - தேமுதிக கூட்டணி இணைந்தது புதிய அணியை உருவாக்கி தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்தன. இவற்றில் 7 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார்.

கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து களம் கண்டது. "பாஜகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன். இனியும் அந்த தவறை செய்யமாட்டேன்" என வெளிப்படையாக அறிவித்து ஜெயலலிதா தேர்தலை எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் "மோடியா... லேடியா.." என்று கூறி பாஜகவிற்கு எதிராகவே பிரச்சாரம் செய்து அதில் வெற்றியும் பெற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேர்தலில் பாஜக 188 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக உடன் பாஜக தலைவர்கள் உடனான நெருக்கம் அதிகரித்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது, அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 5 இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளித்தது.

2019 லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணி தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை என்றே பேசப்பட்டது. தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் தேனி தொகுதியை தவிர மீதம் உள்ள 39 தொகுதியையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

அதன் பிறகு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தது. 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த 20 இடங்களில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நாகர்கோவில், நெல்லை ஆகிய தொகுதிகளை கைப்பற்றி, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தது பாஜக. அதே நேரத்தில் ஆட்சியை இழந்த அதிமுக எதிர்கட்சித்தலைவர் வரிசையில் அமர்ந்தது.

அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரானதை அடுத்து பாஜகவின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விவசாய பணியில் ஈடுபட்ட அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக உடனான தொகுதி பங்கீடு இழுபறியானதால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டது பாஜக. அந்த தேர்தலில் மாநகராட்சி வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 308 இடங்களில் வென்றது பாஜக. அண்ணாமலை தலைமையில் பாஜக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

அதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது பாஜக. அப்போதே எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க அண்ணாமலை சமரச முயற்சி மேற்கொண்டார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை திரும்ப பெற்றது.

அண்ணாமலை தலைமையின் கீழ் அதிருப்தியடைந்த சிலரை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டது பாஜக தலைமையிடம் சங்கடத்தை ஏற்படுத்த, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராடினர். அப்போது எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டது மோதலை உருவாக்கியது. எனினும் கூட்டணி தொடர்ந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுகவில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், சென்னையில் நடந்த கூட்டத்தில் அண்ணாவை குறித்து பேசியதுடன், கண்டனம் தெரிவித்த அதிமுக தலைவர்களுக்கு எதிராக காட்டமாக பேசியிருந்தார். இதுதான் அதிமுக பாஜக கூட்டணி இடையேயான முறிவுக்கு காரணமாக பேசப்படுகிறது. "பாஜக மேலிடம் கூறித்தான் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் விமர்சனத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்றவே முடியாது. தேர்தலில் பாஜக தனியாக நின்றால் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெறும் " என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதெல்லாம் நாடகம் என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் கூறி வந்தனர். எதுவுமே சொல்லாமல் அமைதி காத்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்தநிலையில்தான் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

கூட்டணி முறிவு பற்றி எதுவும் பேசக்கூடாது என பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலையும் இதுவரை எதுவுமே வாய் திறக்கவில்லை. இதுவும் நாடகம்தான் என்றும் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் எதுவும் நடைபெறலாம் என்றும் கூறி வருகின்றனர் அரசியல் நோக்கர்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+