வேட்பாளர்களின் குற்றப் பின்னணி.. முதலிடத்தில் அதிமுக.. 2ஆம் இடத்தில் தவெக! வெளியான ஷாக் ரிப்போர்ட்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 18 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும், 10 சதவீதம் பேர் கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பதாக ஏடிஆர் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் எண்ணிக்கையில் அதிமுக முதலிடம் வகிப்பதாக ஏ.டி.ஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. 2ஆம் இடத்தில் இருப்பது விஜய்யின் தவெக.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களைப் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

ஏடிஆர் ரிப்போர்ட்
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) என்ற தன்னார்வ அமைப்பு, இந்தியாவில் தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவர்களின் குற்ற பின்னணி விவரங்களையும், சொத்து விவரங்களையும் ஆய்வு செய்தோம்" எனத் தெரிவித்தனர்.
குற்றப் பின்னணி
அதன் அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 4,023 வேட்பாளர்களில் 722 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். 404 வேட்பாளர்கள் கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். 13 பேர் மீது கொலை வழக்கும், 44 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கும், 18 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன. வேட்பாளர்களில் 18% குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்றும், 10% கடுமையான குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்றும் தங்களது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கின்றனர்.
கட்சி வாரியாகப் பார்க்கும்போது அதிமுகவில் 69% வேட்பாளர்களும், காங்கிரஸ் மற்றும் பாமக ஆகியவற்றில் தலா 50% வேட்பாளர்களும், பாஜகவில் 48% வேட்பாளர்களும், தவெகவில் 40% வேட்பாளர்களும், திமுகவில் 40% வேட்பாளர்களும், நாதகவில் 25% வேட்பாளர்களும் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர்.
குற்றப் பின்னணியில் அதிமுக முதலிடம்
கடுமையான குற்றங்களான கொலை வழக்குகள் உள்ளவர்கள் 13 பேர், கொலை முயற்சி வழக்குகள் உள்ளவர்கள் 44 பேர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொண்டவர்கள் 18 எனவும் தெரியவந்துள்ளது.
தீவிர குற்ற வழக்கு பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விவரங்களை கட்சி அடிப்படையில் ஆய்வு செய்ததில், அதிமுகவில் 60 வேட்பாளர்கள் மீதும், தமிழக வெற்றி கழகத்தில் 43 பேர் மீதும், திமுகவில் 32 வேட்பாளர்கள் மீதும், பாஜகவில் 9 வேட்பாளர்கள் மீதும், பாட்டாளி மக்கள் கட்சியில் 6 வேட்பாளர்கள் மீதும், காங்கிரஸ் கட்சியில் 5 பேர் மீதும், தேமுதிகவில் ஒரு வேட்பாளர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தவெகவில் 43 வேட்பாளர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்கு
கட்சி வாரியாக தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களில் அதிமுகவின் 170 பேரில் 60 (35%) பேர், பாமகவின் 18 பேரில் 6 (33%) பேர், பாஜகவின் 33 பேரில் 9 (27%) பேர், தவெகவின் 231 பேரில் 43 (19%) பேர், திமுகவின் 175 பேரில் 32 (18%) பேர், காங்கிரஸ் கட்சியின் 28 பேரில் 5 (18%) பேர், சிபிஐயின் 5 பேரில் 1 (20%) பேர் மற்றும் தேமுதிகவின் 10 பேரில் 1 (10%)
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 13% ஆக இருந்த குற்றப் பின்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கை இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 18% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் சதவீதம் 5 என உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications