அண்ணா சாலை அருகே.. விண்ணிலிருந்து பார்த்தால் ஆச்சர்யம்! வியக்க வைக்கும் மதுரவாயல் 2 அடுக்கு பாலம்
சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கட்டப்பட்டு வரும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு பறக்கும் சாலைத் திட்டத்தின் புதிய ஏரியல் வியூ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்ணா சாலை அருகே கூவம் ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் வானில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், பிரம்மாண்ட தூண்களும் அதன் மீது அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகளும் மிகத் தெளிவாகத் தெரிகின்றன.
சுமார் 20.6 முதல் 20.9 கிலோமீட்டர் நீளத்திற்கு, 5,570 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாகி வரும் இந்தப் பாலம், இந்தியாவின் மிக நீளமான ஆறு வழி இரட்டை அடுக்கு மேம்பாலங்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் முடங்கிக் கிடந்த இத்திட்டம், புதிய இரட்டை அடுக்கு வடிவமைப்புடன் மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு முழுவீச்சில் கட்டப்பட்டு வருகிறது.

அண்ணா சாலை அருகே நடக்கும் பணிகளும், தற்போதைய நிலையும்
தற்போது கூவம் ஆற்றின் கரையோரப் பகுதிகள், நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, அண்ணா சாலை சந்திப்புப் பகுதிகள் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. செம்பரம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகக் கட்டுமானத் தளத்தில் பாலத்திற்கான தூண்களும், கான்கிரீட் பாகங்களும் தயாரிக்கப்பட்டு இரவு பகலாகக் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படுகின்றன.
மாநகரப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, தற்போது போக்குவரத்துக் காவல்துறையின் ஒத்துழைப்புடன் பகலில் 5 மணி நேரமும், நள்ளிரவில் 6 மணி நேரமும் என தினமும் 11 மணி நேரம் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. பணிகளை இன்னும் வேகப்படுத்த, தினமும் 16 மணி நேரம் வேலை செய்ய அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு அரசிடமும் சென்னை காவல் ஆணையரிடமும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
Aerial view of Port Maduravoyal Double Decker Corridor near Anna Salai!📸 : Jaga Creations (IG) https://t.co/Fnvneor5Iw
— Chennai Updates (@UpdatesChennai) November 14, 2026
இரட்டை அடுக்கு பாலம் எப்படி செயல்படும்?
இந்தப் பறக்கும் சாலையின் சிறப்பம்சமே இதன் இரண்டு அடுக்கு வடிவமைப்புதான். சென்னை துறைமுகத்தின் 10-வது நுழைவு வாயிலில் (நேப்பியர் பாலம் அருகே) தொடங்கி, கூவம் ஆற்றங்கரை வழியாக கோயம்பேடு வரையிலான சுமார் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை அடுக்கு பாலமாக இது அமைகிறது.
இதில் மேல் அடுக்கு முழுக்க முழுக்க சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கண்டெய்னர் லாரிகள், கனரக சரக்கு வாகனங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.
கீழ் அடுக்கு சாதாரண பொதுமக்கள் பயன்படுத்தும் கார்கள், பைக்குகள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்காக 4 வழிச் சாலையாக உருவாக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்தக் கீழ் அடுக்கைப் பயன்படுத்த எந்தவித சுங்கக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அண்ணா சாலை, சிவானந்தா சாலை, கல்லூரி சாலை, ஸ்பர் டேங்க் சாலை, காமராஜர் சாலை மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட 13 முக்கிய இடங்களில் பொதுமக்கள் பாலத்தில் ஏறவும் இறங்கவும் தனித்தனி வழிகள் அமைக்கப்படுகின்றன. கோயம்பேடு முதல் மதுரவாயல் வரையிலான மீதமுள்ள 7 கிலோமீட்டர் தூரம், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுவே ஒற்றை அடுக்கு பாலமாகச் சென்று சென்னை புறவழிச்சாலையுடன் இணையும்.
எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?
ஆரம்பத்தில் இந்தப் பாலத்தை மே 2026-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பருவமழை பாதிப்புகள் மற்றும் கூவம் ஆற்றங்கரையில் தூண்கள் அமைப்பதில் இருந்த தொழில்நுட்பச் சவால்கள் காரணமாகப் பணிகள் சற்று தாமதமாகின. தற்போது பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், நவம்பர் 2027-க்குள் மொத்தப் பணிகளையும் முடித்துப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தப் பாலம் திறக்கப்பட்டால், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை மற்றும் சென்னையின் மையப் பகுதிகளில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 50 சதவீதத்திற்கும் மேல் குறையும். கண்டெய்னர் லாரிகள் நகருக்குள் வராமல் நேரடியாகத் துறைமுகத்திற்குச் செல்வதால், சென்னை மக்களின் அன்றாடப் பயணம் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் மாறும் என்பது உறுதி.




Click it and Unblock the Notifications
