15 ஆண்டு அஞ்ஞாத வாசம்! சீண்டிய சிஷ்யர் ‘நத்தம்’! ’மீண்டு’ம் பாஃர்முக்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன்!
சென்னை : ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த திண்டுக்கல் சீனிவாசன் அரசியலில் தான் வளர்த்து ஆளாக்கிவிட்ட நத்தம் விஸ்வநாதனாலேயே ஓரம் கட்டப்பட்ட நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த இடத்தில் பொருளாளர் பதவியை கைப்பற்றியுள்ளதால் திண்டுக்கல் மாவட்ட அரசியல் களம் சூடு பிடித்துள்ளது...
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் தற்போது அதிமுகவில் நடந்து வரும் நிகழ்வுகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொருளாளராக இருந்தபோது அவரது கண் அசைவில் கட்சியின் முழு கட்டுப்பாடும் இருந்தது அனைவருக்குமே தெரியும்.
அவர் நினைத்தால் சாதாரண தொண்டன் அடுத்த நாள் அமைச்சராகலாம். அமைச்சர் அடுத்த நாளே சாதாரண தொண்டனாக கூட அதிமுகவில் நீடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. அந்த அளவுக்கு ராணுவ கட்டுப்பாட்டோடு கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வந்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்
அவரது மறைவுக்குப் பிறகு தற்போது அதிமுகவில் நடந்து வரும் அதிகார சண்டைகள் காரணமாக மாநில அளவில் மட்டுமல்ல மாவட்ட அளவிலும் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு நிர்வாகிகள் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிமுகவின் பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றியுள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஜெயக்குமார், கே.பி முனுசாமி, சிவி சண்முகம், பொன்னையன், செங்கோட்டையன் உள்ளிட்ட பல சீனியர் மற்றும் மூத்த அமைச்சர்களை ஓரங்கட்டி பொருளாளர் பதவியை சீனிவாசன் கைப்பற்றியுள்ளது அவ்வளவு சாதாரணமல்ல.

நத்தம் விஸ்வநாதன்
ஆனால் இதே பொருளாளர் பதவியை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வகித்தவர் தான் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். எம்பியாக இருந்த அவருக்கு நாடாளுமன்றத்திலும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் உள்ளூர் அரசியலில் கவனம் செலுத்த முடியாத நிலையில் தனது சிஷ்யரான நத்தம் விஸ்வநாதனை அமைச்சராக்கினார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்த விஸ்வநாதன் கொஞ்சம் கொஞ்சமாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்த்தார்.

அதிமுக பொருளாளர்
ஒரு கட்டத்தில் பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவானார் நத்தம் விஸ்வநாதன். மாவட்ட செயலாளர் முப்பெரும் துறை அமைச்சர் என கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்ட அவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஐவர் அணியிலும் இடம் பெற்றார். இதையடுத்து மாவட்ட அவை தலைவர் என்ற பொறுப்பு திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்கப்பட்டாலும் சொந்தக் கட்சியினரே அவரை மதிக்காத நிலை தான் இருந்தது. சில நேரங்களில் மேடைகளில் கூட அவருக்கு இடம் கொடுக்காத நிகழ்வுகளும் நடைபெற்றது.

தீவிர அரசியல்
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நத்தம் விஸ்வநாதன் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் சசிகலா ஆதரவு காரணமாக மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பினார் திண்டுக்கல் சீனிவாசன். நீங்கள் ஜெயித்தால் நிச்சயம் உங்களுக்கு அமைச்சர் பதவி என ஜெயலலிதா கூறினார். சொன்னது போலவே திண்டுக்கல்லில் ஜெயித்து அமைச்சரானார். அதே நேரத்தில் திண்டுக்கல்லில் திமுகவின் முக்கிய முகமான ஐ பெரியசாமியை எதிர்த்து ஆத்தூரில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைய அவரது பதவியும் பறிக்கப்பட்டது. இதை அடுத்து மாவட்ட செயலாளராக மருதராஜ் நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து மாவட்ட செயலாளர் பதவியையும் திண்டுக்கல் சீனிவாசன் கைப்பற்றினர்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு
அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி உடன் கைகோர்த்து கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் மாவட்ட செயலாளர் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் என பல்வேறு பதவிகளை பெற்ற திண்டுக்கல் சீனிவாசன் தன்னால் வளர்த்து விடப்பட்டு தன்னை ஏமாற்றிய நத்தம் விஸ்வநாதனையும் ஒரு கை பார்க்க தயங்கவில்லை. தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார். திண்டுக்கல் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு மேற்கு மாவட்ட செயலாளராக திண்டுக்கல் சீனிவாசனும் கிழக்கு மாவட்ட செயலாளராக நத்தம் விசுவநாதன் பதவி ஏற்று கொண்டனர்.

நிர்வாகிகள் கலக்கம்
ஆனாலும் திண்டுக்கல் மாநகராட்சியில் அடிக்கடி நத்தம் விஸ்வநாதனின் தலையீடு இருந்தது. நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கூட தனது ஆதரவாளர்களுக்கு சீட்டு கேட்டு விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பை அணுகினாலும் அதற்கு துளியும் இடம் கொடுக்கவில்லை. அதையும் மீறி போட்டியிட்ட ஒன்று இரண்டு பேரும் படுதோல்வியை சந்தித்தனர். இதனால் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் இடையேயான மோதல் போக்கு நிர்வாகிகள் மட்டத்திலும் தொடர்ந்து இன்று வரை இருக்கிறது. இந்த நிலையில் தான் அதிமுக பொருளாளராக மாநில பொறுப்பை பெற்றிருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்ட அரசியல களத்தில் சூடு பிடித்துள்ளது. மாவட்டம் முழுவதையும் மீண்டும் கைக்குள் கொண்டுவர கிடைத்திருக்கும் வாய்ப்பை திண்டுக்கல் சீனிவாசன் நிச்சயம் விட்டுவிட மாட்டார். இதனால் நத்தம் விஸ்வநாதன் ஆதரவு நிர்வாகிகளிடைய சற்று கலக்கம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications