"அம்மா உணவகங்களை புதுப்பியுங்கள்!" உணவின் தரம் பற்றி வந்த புகார்! உடனே முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை உட்பட மாநிலம் முழுவதும் இயங்கும் அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார். சமீப காலமாக வழங்கப்படும் உணவின் தரம் திருப்திகரமாக இல்லை எனப் புகார் வந்த நிலையில், அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்று 'அம்மா உணவகம்' தான். கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். இது அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூட இடம்பெறாத திட்டமாகும். வெறும் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்குச் சாம்பார் சாதம், 3 ரூபாய்க்குத் தயிர்ச் சாதம் என மிகக் குறைந்த விலையில் உணவை வழங்கி, நகர்ப்புற ஏழைகளுக்குப் பேருதவியாக இருந்தது.

அம்மா உணவகம்
தமிழகத்தின் இந்த மெகா ஹிட் மாடல், பிற்காலத்தில் கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடி திட்டமாகவும் இருந்தது. கடந்த 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அப்போதும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கியே வருகிறது. பேரிடர் காலங்களான பெருமழை, வெள்ளம் போன்ற இக்கட்டான சூழல்களில் மக்களுக்கு இலவசமாகப் பசி தீர்க்கும் முதன்மைப் புகலிடமாக இந்த உணவகங்கள் மாறுகின்றன.
உத்தரவு
அதேநேரம் சமீபகாலமாகச் சில இடங்களில் உள்கட்டமைப்புச் சவால்களைச் சந்தித்து வருகிறது. மேலும், அம்மா உணவகத்தில் கிடைக்கும் உணவுகளின் சுவையும் தரமும் கூட திருப்திகரமாக இல்லை என்று புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுக்க இயங்கும் 600+ அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
திருப்திகரமாக இல்லை
சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் உரிய அரசுத் துறைச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளைத் தங்கு தடையின்றிப் பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications