சென்னை ஐகோர்ட் நீதிபதி நேர்முக உதவியாளர் தேர்வில் முறைகேடு.. தீர்ப்பில் முக்கியமான விஷயம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக 17 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களது நியமன நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதிகளுக்கான 17 நேர்முக உதவியாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக 17 பேர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களது நியமன நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற தொழில்நுட்ப உதவியாளர்கள், நூலகர்கள், தட்டச்சர்கள், பதிவாளர்களின் உதவியாளர்களாக பணியாற்றிய 17 பேர் நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விதிகளின்படி, உரிய தகுதியை பெறாத நிலையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள், உரிய தகுதியை பெற 2 ஆண்டுகள் வரை சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது சரியானது கிடையாது. குறிப்பாக திறன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
அதுவும் இந்த தேர்வு நடைமுறைகளில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பணியில் உள்ளவர்களை மட்டும் பங்கேற்க அனுமதித்து அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சமுதாயத்தில் உள்ள பிற தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இந்த செயல் நீதித்துறை நிர்வாகம் மீதான தவறான தகவலை பொதுமக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும்.
எனவே பணியில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை என்றால், நேரடி தேர்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற விதியை மீறி, விதிகளை தளர்த்தி இந்த 17 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதால், இந்த 17 பேரின் நியமனங்களையும் ரத்து செய்கிறோம். இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்கும் வகையில் புதிதாக மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் தீர்ப்பில் கூறியுள்ளனர்.














Click it and Unblock the Notifications