ஓய்வூதியம் + மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு திட்டம்.. முழு விவரம்
சென்னை: வயதான பின்னர் பலர் நிம்மதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அதற்கு ஓய்வூதியமும், மருத்துவ காப்பீடும் அவசியம் ஆகும். ஆனால் இரண்டையும் தனித்தனியாகவே செய்ய வேண்டியதிருக்கிறது. அதற்கு செலவும் அதிகம். இந்த சூழலில் இரண்டையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க என்.பி.எஸ். சுவாஸ்த்யா பென்ஷன் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த திட்டத்தை இன்னும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கூட கொண்டுவரவில்லை.
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி நாட்டின் பெரிய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஓய்வூதியம் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை ஒரே பாலிசியாக இன்று வரை கொண்டுவரவில்லை.. எனினும் சில முன்னணி தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு ஆகிய இரு வேறு பிரிவுகளை இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு ஒரே பேக்கேஜாக வழங்குகின்றன. இதில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் ஓய்வூதியத்திற்கான முதலீட்டையும் செய்ய முடியும், அதே நேரத்தில் உங்களுக்கான மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பும் கிடைத்து வருகிறது.

மத்திய அரசின் புதிய 'என்.பி.எஸ். சுவாஸ்த்யா பென்ஷன்' திட்டம் போல, நேரடியாக ஓய்வூதியக் கணக்கிலிருந்து மருத்துவச் செலவுகளுக்குப் பணம் எடுக்கும் தொழில்நுட்பக் கட்டமைப்புடன் முழுமையாக இணைக்கப்படவில்லை.. மத்திய அரசின் புதிய 'என்.பி.எஸ். சுவாஸ்த்யா பென்ஷன்' திட்டம் பற்றி விரிவாக பார்ப்போம்.
தற்போது தனியார் நிறுவனங்களில் ஓய்வூதிய பாலிசி எடுக்கும் போது, 'கிரிடிகல் இல்னஸ் ரைடர்' எனப்படும் கூடுதல் மருத்துவப் பாதுகாப்பை இணைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறத. இதன் மூலம் புற்றுநோய், பக்கவாதம் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் போது ஒரு குறிப்பிட்ட தொகை மருத்துவச் செலவிற்காக வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதேபோல் தனியாக ஓய்வூதியத் திட்டம் வைத்திருப்பவர்கள், மருத்துவச் செலவுகளுக்கு எனத் தனியாக தனியார் நிறுவனங்களில் சீனியர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்தசூழலில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய திட்டத்தில், ஒருவரது ஓய்வூதிய மருத்துவக் கணக்கிலிருந்தே நேரடியாக மருத்துவமனைக்கு பணம் செலுத்தப்படும். இத்தகைய நேரடித் தொழில்நுட்ப இணைப்பு மற்றும் பங்களிப்பு தற்போதைய தனியார் காப்பீட்டுத் திட்டங்களில் கிடையாது.
இதுபற்றி மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளிட்டுள்ள அறிவிப்பில், வயதான காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகளைக் கண்டு அஞ்சாமல், மக்கள் தங்களின் சேமிப்பைக் கொண்டே தரமான சிகிச்சையைப் பெற வழிவகை செய்யும் புதிய திட்டத்தை (என்.பி.எஸ். சுவாஸ்த்யா பென்ஷன்) இன்னும் 70 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ்.ராமன் கூறுகையில், இந்த திட்டம் ஒப்புதல் பெற்று, தற்போது அதனை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்தின்படி ஓய்வூதிய நிதி நிறுவனங்கள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பு வழங்கும். குறிப்பாக, ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை செலவாகக்கூடிய கடுமையான நோய்கள் மற்றும் பெரிய மருத்துவ சிகிச்சைகளின் செலவுகளை சமாளிக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும். மேலும் என்.பி.எஸ். சுவாஸ்த்யா பென்ஷன் திட்டத்தின் கீழ், முதலில் ஓய்வூதிய மருத்துவக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை நேரடியாக மருத்துவமனை அல்லது மருத்துவ சேவை வழங்குநருக்கு செலுத்தப்படும். அதன் பிறகு மீதமுள்ள செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் வகையில் என்.பி.எஸ். சுவாஸ்த்யா பென்ஷன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கான மருத்துவ ஓய்வூதியக் கணக்கில் ரூ.3,000 முதல் ரூ.1 லட்சம் வரை பங்களிப்பு செய்ய முடியும்.














Click it and Unblock the Notifications