விரைவில் தேர்தல் வரும் என மு.க ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் புரிகிறது.. சிபிஎம் சண்முகம்
சென்னை: விரைவில் தேர்தல் வரும் என மு.க ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் புரிகிறது என்று சிபிஎம் பெ சண்முகம் திமுக மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததை திமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அதன் வெளிப்பாடு தான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஒரு கட்சியில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விரும்பி கட்சி மாறுவது என்பது இயல்பான விஷயம். அது ஆட்சி மாறும் போது நடக்கின்ற விஷயம் தான். ஆனால் பேரம் பேசி மிரட்டி ஒருவரை கட்சி மாறச் செய்வது என்பது தவறான விஷயம். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் சிபிஎம் பெ சண்முகம் தெரிவித்துள்ளார்.

ரூ.35 கோடி வரை பேரம்
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விஜய்யின் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்துள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவெக எம்.எல்.ஏ இளையராஜா மட்டுமில்லாமல், தற்போது அமைச்சராக உள்ள பல்லவி உள்பட 6 எம்.எல்.ஏக்களிடம் ரூ.35 கோடி தருகிறோம் என பேரம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாகியுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சிபிஎம்) மாநில செயலாளர் பெ சண்முகம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ஸ்டாலின் சொன்னது இப்போது தான் புரிகிறது
அவர் கூறியதாவது:- மக்கள் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து தான் குதிரை பேரம், கழுதை பேரம் போன்றவற்றில் எல்லாம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்து இப்போது திமுக வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆகவே எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும். தாங்கள் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முயற்சிகள் நடைபெற்று இருப்பதாக தெரிகிறது. ஏன் என்றால் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் அடுத்து தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என சொல்லி பேசியதனுடைய பின்னணி என்ன என்பது இப்போது தான் தெரிய வருகிறது.
கடும் நடவடிக்கை வேண்டும்
அதற்கான ஒரு தீவிர முயற்சியில் இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு தான் இந்த சட்டமன்ற உறுப்பினரை விலைபேசி இருக்கின்ற செய்தி வெளிவந்து இருக்கிறது. இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் தானாக விரும்பி ஒரு கட்சியில் போய் சேர்வது என்பது தமிழ்நாட்டு சகஜமான விஷயம் தான்.
இடதுசாரிகளை தவிர மற்ற கட்சிகள், வேறு கட்சிகள் ஆளும் கட்சிக்கு மாறுவது என்பது தமிழ்நாட்டில் நிறைய நடந்து இருக்கிறது. விரும்பி கட்சி மாறுவது என்பது இயல்புதான். ஆனால் கோடிக்கணக்கில் விலை பேசி ஒருவரை வாங்குவது என்பது எல்லாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எனவே இதில் யார் ஈடுபட்டு இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.. என்று பேசினார்.















Click it and Unblock the Notifications