5570 கோடியில் சென்னை துறைமுகம் டூ மதுரவாயல் மேம்பாலம்.. மத்திய அரசு தந்த புதிய அப்டேட்
சென்னை: சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே 21 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை அடுக்கு மேம்பால விரைவுச்சாலை பணிகள் ரூ.5570 கோடி மதிப்பில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பகல் நேரத்தில் 5 மணி நேரமும், இரவு நேரத்தில் 6 மணி நேரமும் என தினசரி 11 மணி நேரம் பணிகள் நடக்கிறது. கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் சீராக நடந்து வருகிறது. இந்த சாலை திட்டத்தை 2027-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகளை முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மிக நீளமான 6 வழி இரட்டை அடுக்கு மேம்பால நெடுஞ்சாலை சென்னையில் உருவாக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக துறைமுகம் - மதுரவாயல் இடையே மேம்பாலப் பணி நடக்கிறது. மொத்தம் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.5 ஆயிரத்து 570 கோடியில் இரட்டை அடுக்கு மேம்பால விரைவுச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த விரைவுச்சாலை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவிடம் அருகே உள்ள சென்னை துறைமுக நுழைவாயில் எண் 10-ல் இருந்து தொடங்கி, மதுரவாயல் சந்திப்பு வரை நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும் போது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் விரைவு வழிச்சாலை வழித்தடம் கோயம்பேடு வரை கூவம் ஆற்றங்கரையை ஒட்டிச் செல்கிறது. அங்கிருந்து, மதுரவாயலை அடையும் வரை தேசிய நெடுஞ்சாலை 48-ன் மையப் பகுதியை ஒட்டித் தொடர்கிறது. பாலத்தின் மேல்தளம் சென்னை துறைமுகத்தின் 10-வது நுழைவு வாயில் வழியாக சென்று வரும் கொள்கலன் லாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. இந்த பிரத்யேக சரக்கு வழித்தடத்தைப் பயன்படுத்தும் வணிக வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் , கீழ்த்தளம் வழக்கமான மாநகரப் போக்குவரத்திற்காக சுங்க கட்டணமின்றி திறக்க திட்டமிட்டுள்ளது.
இங்கு பகல் நேரத்தில் 5 மணி நேரமும், இரவு நேரத்தில் 6 மணி நேரமும் என தினசரி 11 மணி நேரம் பணிகள் தீவிரமாக நடக்கிறது. கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் சீராக நடக்கிறது. இந்த வழித்தடம் 2027-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வருகிற 2047-ம் ஆண்டுக்குள் துறைமுகத்தின் கொள்ளளவு ஆண்டுக்கு 200 டன்களை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அது செயல்பாட்டுக்கு வந்தவுடன், இந்த சரக்கு வழித்தடம் துறைமுகத்தில் சரக்குகள் வந்து செல்லும் நேரத்தை மேம்படுத்துவதோடு, சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வையும், மாநகர பயணிகளுக்கு சுமூகமான பயணச் சூழலையும் வழங்கும். கடந்த மே மாதம் முடிக்க திட்டமிடப்பட்ட இந்த பணிகள் பருவமழையால் தாமதம் ஏற்பட்டது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே 21 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை அடுக்கு மேம்பால திட்டம் நிறைவு பெற்றால் சென்னை நகரப் போக்குவரத்து நெரிசல் குறையும், துறைமுக சரக்குப் போக்குவரத்து மிகவும் எளிதாகும். தினசரி சுமார் 40,000 கார்களின் போக்குவரத்தை விரைவுச்சாலை கையாளும் திறன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications