மனைவி கேட்ட ஜீவனாம்சம்! ஆனால் கணவனை விட 3 மடங்கு அதிக சம்பளமாம்! ஹைகோர்ட் நெத்தியடி தீர்ப்பு பாருங்க
பெங்களூரு: "ஒரு பெண் கல்வி கற்று, பொருளாதார ரீதியாக தற்சார்புடன் இருந்து, தன் கணவரை விடக் கூடுதல் வருமானம் ஈட்டும்போது அவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியாது. மனைவி என்ற காரணத்திற்காக மட்டுமே நீதிமன்றங்கள் தானாக முன்வந்து பராமரிப்புத் தொகையை வழங்க உத்தரவிடக் கூடாது" என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் நெத்தியடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த கோனிகொப்பா.. 37 வயதாகிறது.. இவருக்கும், மைசூருவை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2024ம் ஆண்டு கல்யாணம் நடைபெற்றது.. ஆனால் சந்தோஷமாக தொடங்கிய இவர்களது வாழ்க்கை பயணம், நீண்ட காலம் நீடிக்கவில்லை..

பிரிந்த தம்பதி
கல்யாணமாகி வெறும் 2 மாதங்களிலேயே 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்தும் விட்டனர்.. இவர்களுக்கு குழந்தைகள் யாரும் இல்லை.
இந்நிலையில் தனியாகப் பிரிந்து சென்ற மனைவி, தனக்கு பராமரிப்பு தொகை வேண்டி மைசூரு நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றமும் மனைவியின் வருமானத்தை முறையாக ஆராயாமல், மாதம் ரூ.20,000 ஜீவனாம்சம் வழங்குமாறு கணவருக்கு உத்தரவிட்டது.
கர்நாடகா ஹைகோர்ட்
இந்த உத்தரவினால் அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக கர்நாடகா ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தில் கணவர் தரப்பு வழக்கறிஞர் மனைவியின் அசல் வருமான வரித் தாக்கல் (TDS) சான்றிதழ்களை ஆதாரமாகச் சமர்ப்பித்தார். அந்த ஆதாரங்களின்படி, அந்தப் பெண்ணின் மாதச் சம்பளம் ரூ.1.64 லட்சம் என்பது உறுதியானது. அவரே தனக்குக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் மாத வருமானம் வருவதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஆனால், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணவனின் மாதச் சம்பளமோ வெறும் ரூ.57,000 முதல் ரூ.60,646 வரை மட்டுமே ஆகும். அதாவது, மனைவியின் வருமானத்தில் பாதியளவிற்கும் குறைவாகவே கணவன் சம்பாதித்து வந்துள்ளார்.
சம்பளம் அதிகம் பெறும் மனைவி
இதனிடையே மனைவி தரப்பு வழக்கறிஞர், "தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் இருந்தாலும், திருமணத்திற்காக வாங்கிய கடன்களை அடைக்க வேண்டியுள்ளதால் இந்த ஜீவனாம்சம் தேவை" என்று வாதிட்டார்.
ஆனால், தம்பதியினர் தாக்கல் செய்த சொத்து மற்றும் கடன் விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களை நீதிபதி சில்லகூர் சுமலதா விரிவாக ஆய்வு செய்தார். அதில், மனைவி தனக்கு இருப்பதாகக் கூறிய கடன்கள் பற்றியோ, அதை எப்போது வாங்கினார், எவ்வளவு பாக்கி உள்ளது என்பது பற்றியோ எந்தவொரு முறையான விவரங்களையும் குறிப்பிடவில்லை என்பது தெரியவந்தது.
நீதிபதி தந்த தீர்ப்பு
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, கீழமை நீதிமன்றம் இந்த உண்மைகளையும், மனைவியின் மிக அதிகப்படியான ஊதியத்தையும் கணக்கில் கொள்ளாமல் உத்தரவிட்டது சட்டப்படி செல்லாது என்று கூறி அதை ரத்து செய்தார்.
அதுமட்டுமல்லாமல், குடும்ப வன்முறைச் சட்டம் அல்லது இந்து பராமரிப்புச் சட்டங்களின் கீழ் பெண்களுக்கு ஜீவனாம்சம் கோர உரிமை இருந்தாலும், மனு தாக்கல் செய்யப்பட்ட உடனேயே நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாகத் தொகையை ஒதுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
கணவரின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்பத் தன்னை பராமரித்துக் கொள்ள மனைவிக்குத் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வழக்கில் மனைவி தாராளமாகத் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியும் என்பதால் கணவரிடமிருந்து பணம் பெறத் தேவையில்லை என்றும் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.
சட்டங்கள் என்பவை தேவையை அடிப்படையாக கொண்டவையே தவிர, பாலின பாகுபாட்டிற்கானது அல்ல என்பதை உணர்த்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்பதால், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது...!!












Click it and Unblock the Notifications