உண்மையிலேயே இப்படி ஐடியா தருவது யார்? பாக்யராஜ் மகன் சாந்தனு செயலால் நெட்டிசன்கள் அதிருப்தி
சென்னை: ஒருத்தர் இறந்ததுக்கு அப்புறம் அவர் பேர்ல ஒரு அறிக்கை விடுவது தவறு. இதனை என்ன சொல்றதுன்னு தெரியவில்லை என்று பாக்யராஜ் மகன் சாந்தனு செயலை நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர். பாக்யராஜ் இறந்த பின்னர் அவரது மகன் சாந்தனு குறித்து அவர் எழுதியதை அறிக்கையாக, அதுவும் பாக்யராஜின் ஐடியில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று நெட்டிசன்கள் கமெண்ட் செக்சனில் கேட்டு வருகிறார்கள்.
பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக ஜூன் 27ம் தேதி அன்று காலமானார். 73 வயதாகும் அவர், நடைபயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போகும் வழியிலேயே உயிரிழந்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே பாக்யராஜ் இறந்த பின்னர், அவரது எக்ஸ் தள பக்கத்தில் உள்ள ஐடியில் கடந்த ஜூன் 30ம் தேதி ஒரு அறிக்கை பாக்யராஜ் போடுவது போல் போடப்பட்டிருந்தது. இயக்குனர் பாக்யராஜ் அலுவலகம் போடுவதாக கூறி அந்த பதிவு போடப்பட்டிருந்தது. அந்த பதிவில், "எஞ்சுவது கொஞ்சமாயினும், மிஞ்சியது அன்பே ஆஸ்தியாகும்" என்ற வரிகளுடன் தனது இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனது மகன் சாந்தனுவின் புதிய திரைப்படத்தை ஆதரிக்க வேண்டும் என்றும், "என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இதை பார்த்த பல நெட்டிசன்கள், பாக்யராஜ் இறந்த பின்னர் அவரது பெயரில் உள்ள ட்விட்டர் ஐடியில் நுழைந்து இப்படி பதிவு போடுவது தவறு என்று விமர்சிக்கிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், "உண்மையிலேயே இப்படிப்பட்ட ஐடியாக்கள் யார் தருகிறார்கள் என்பதே கேள்வி. உங்கள் தந்தை ஒரு லெஜண்ட். ஆரம்ப காலத்திலிருந்து இறுதி நாள்வரை ஒரு பெரிய லெகஸியை விட்டுச் சென்றவர். ஆனால் அவர் மறைந்த ஒரு நாள் கூட ஆகவில்லை என்ற சூழ்நிலையில், இப்படிப்பட்ட விஷயங்களைப் பயன்படுத்துவது சரியா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்
இன்னொரு நெட்டிசன், "ரேங்க் கார்டில் போலி கையெழுத்து போடுவது அமெச்சூர் (ஆரம்பப் பள்ளி) ரகம்; ஆனால், பெற்றோர் மறைந்த பிறகு அவர்களின் லெட்டர் பேடைப் பயன்படுத்தி, கூடப்பிறந்தவர்களை தவிர்த்துவிட்டு, சுயநலமாக ஆதரவு தேடுவது உலக மகா தனித்துவமான 'லெஜண்ட்' ரகம்!" என்று கூறியுள்ளார். மூன்றாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், ஒருத்தர் இறந்ததுக்கு அப்புறம் அவர் பேர்ல ஒரு அறிக்கை விடுவது தவறு.. இந்த பொழப்புக்கு என்ன சொல்றதுன்னு தெரியல" என்று காட்டமாக கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "எதுவும் நிரந்தரமானது அல்ல. கடந்த கால நினைவுகளைப் போற்றி அதே சமயம் அவற்றைக் கடந்து செல்வதே புத்திசாலித்தனம். மற்றவர்களின் படைப்பாற்றலைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருப்பது அவர்களுக்கும் நமக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையான படைப்பாற்றலையும் அதன் படைப்பாளியையும் உலகம் அறியும், நினைவில் கொள்ளும் மற்றும் கொண்டாடும்; அதைப்பற்றி வேறொருவர் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.
அதேநேரம் சாந்தனுவுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர். ஒரு நெட்டிசன் கூறுகையில், " இயக்குனர் பாக்யராஜ் சார் இதை முன்பே எழுதி, ஒருவேளை தான் இறந்துவிட்டால் வெளியிடுவதற்காக அலுவலகத்தில் வைத்திருக்கக்கூடும்... இது சாத்தியமாகலாம், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே, இதை வைத்துக்கொண்டு சாந்தனுக்கு எதிராக எந்தவொரு அனுமானத்தையோ அல்லது தவறான கருத்துகளையோ நாம் உருவாக்க வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.














Click it and Unblock the Notifications