ஜெயலலிதாவை சிறையில் அடைத்தவர்களோடு கூட்டணி அமைக்க சதி.. யார் துரோகி? கொந்தளித்த செங்கோட்டையன்
சென்னை: தேர்தல் முடிந்த பிறகு ஒரு சதித்திட்டம் நடைபெற்றது. ஜெயலலிதாவை 26 நாட்கள் சிறையில் வைத்தவர்களோடு கூட்டணி அமைக்கலாம் என்று சதிகாரர்கள் இருக்கிறார்கள்.. அதை தகர்த்து எறியும் சக்தியாகவே விஜபாஸ்கர்கள் வந்துள்ளனர். துரோகம் இங்கே இல்லை. துரோகம் அங்கே இருக்கிறது. அதை அடையாளம் காட்டியவர்கள்தான் இவர்கள் என்று தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இருவரும் ஆளும் தவெகவில் இணைய முடிவு செய்தனர். இதற்கான விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டத்தில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தவெகவில் விஜயபாஸ்கர்கள் இணைந்தனர்.

முதல்வர் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
இணைப்பு விழா மாநாடு போல நடைபெறுகிறது. புஸ்ஸி ஆனந்த் தற்போது பிசி ஆனந்தாக வலம் வருகிறார். இளைஞர்களை கவரும் ஆற்றல் மிக்கவராக ஆதவ் அர்ஜுனா உள்ளார். நான் எம்ஜிஆர், ஜெயலிதாவை அடுத்து விஜய்யுடன் இப்போது பயணம் செய்து வருகிறேன். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சதித்திட்டம் நடைபெற்றது. ஜெயலலிதாவை 26 நாட்கள் சிறையில் வைத்தவர்களோடு கூட்டணி அமைக்கலாம் என்று சதிகாரர்கள் இருக்கிறார்களே அதை தகர்த்து எறிய வேண்டுமா வேண்டாமா?
அதை தகர்த்து எறியும் சக்தியாகவே விஜபாஸ்கர்கள் வந்துள்ளனர். துரோகம் இங்கே இல்லை. துரோகம் அங்கே இருக்கிறது. அதை அடையாளம் காட்டியவர்கள்தான் இவர்கள். நல்ல தலைமையை ஏற்றுக்கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்திய நாட்டின் வரலாற்றில் ஒரு தூய்மையான தலைமை. நேற்று கூட ஒரு கூட்டம் நடைபெற்றது. 50, 60 வயதானவர்களை வைத்துக்கொண்டு மகளிர் அணி மாவட்ட கூட்டம்.. என்னய்யா கூட்டம்.. இங்கே ஆர்ப்பரித்து இருக்கிற இளைஞர்களை பார்க்கிறோம்.
இங்கே ஓடுகிற பாம்பை மிதிக்கின்ற இளைய பட்டாளம் இருக்கிறது. அங்கே தடுமாறிக்கொண்டு இருந்தார்கள். எதிர்க்கட்சியாகவே ஜாலியாக இருந்தார். அதையும் மக்கள் பிடுங்கிவிட்டார்கள். தவெகவிற்கு வருபவர்களை துரோகிகள் என்பதா? எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது கட்சி அல்ல. கார்ப்பரேட் கம்பெனி." என்று பேசினார்.












Click it and Unblock the Notifications