காலை 6.30 மணியிலிருந்து.. காலியான நாற்காலிகள்! ஆனந்தை கூல் செய்ய சி.விஜயபாஸ்கர் சொன்ன காரணம்!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தவெக இணைப்பு விழாவில் முக்கால்வாசி நாற்காலிகள் காலியாக இருந்த நிலையில் அதை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாசுக்காக சமாளித்த விதம் வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் சி.விஜய்பாஸ்கர் பேசுகையில், அதிமுகவின் அனைத்து ஜாம்பவான்களும் தவெகவுக்கு வந்துவிட்டனர். அங்கே தற்போது அதிமுகவின் லெட்டர்பேட் மட்டுமே இருக்கிறது. தலைமையில் இருக்கக் கூடிய ஒருவரின் தவறான முடிவின் காரணத்தால்தான் மகாபலிபுரத்தில் கடல் போல மக்கள் வந்திருக்கிறார்கள்.

விராலிமலை மக்களின் கருத்துகளின்படி தவெகவில் இணைந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்னதாகவே தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். எடப்பாடி பழனிசாமி செவி மடுக்கவில்லை.
தேர்தலுக்கு பிறகு மக்கள் தவெகவுக்கு ஏகோபித்த ஆதரவை கொடுத்ததால் தவெக அரசுக்கு நாம் ஆதரவு அளிக்கலாம் என்றோம். அதையும் அதிமுக தலைமை ஏற்கவில்லை. திமுக தீயசக்தி என எம்ஜிஆர் கூறியிருந்த நிலையில் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதில் எங்களுக்கு பிடிக்கவில்லை.
எதிர்கொண்ட முதல் தேர்தலிலே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானித்து அண்டை மாநிலங்களை அதிர வைத்திருக்கும் மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி முதல்வர் விஜய்!

தமிழக அரசியலில் சப்தமான விசில் சப்தத்தை சப்தமின்றி மவுனபுரட்சியாக ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தியிருப்பவர் முதல்வர் விஜய்! தமிழக மக்களை தன் நெஞ்சிலே குடிவைத்திருக்கும் ஒரு மகத்தான தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். தமிழக வெற்றிக் கழக குடும்பத்தில் நாங்கள் எங்களை இணைத்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழக மக்களின் கனவுக்கு ஒரு பாதை கிடைத்திருக்கிறது. எளிய மக்களின் குரலுக்கு செவிமடுக்க ஒரு இயக்கம் கிடைத்திருக்கிறது. நம் மண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற ஒரு களம் கிடைத்திருக்கிறது. மாற்றத்தை விரும்பிய ஒவ்வொரு மனதிற்கும் நம்பிக்கை கிடைத்திருக்கிறது.
தொண்டர்களை தோழர்களாக அரவணைக்கும் தலைமை இருக்கும் கட்சியில் நாம் இணைந்தது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தவெக வேறு தமிழகம் வேறு அல்ல! வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும். உறுதியான அந்த வெற்றி தலைமையின் பயணத்தில் நாம் வெற்றி வாகை சூடுவோம், உங்களுக்கு உழைப்போம், துணை நிற்போம். இந்த நல்லாட்சி தொடர்ந்திட உழைத்திடுவோம்.

பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களே! இங்கே நீங்கள் பார்ப்பது வெறும் டிரெய்லர்! ஏன் என்றால் புதுக்கோட்டையை சென்னைக்கு வர சொல்லிவிட்டீர்கள். 7 மணி நேரம் பயணித்து புதுக்கோட்டையும், திருச்சியும், தஞ்சையும், டெல்டாவும் ,பெரம்பலூரும், நாகை, சிவகங்கை, கரூர் எல்லாமே இங்கே வந்திருக்கிறது.
தலைவர் விஜய்யிடம் அனுமதி வாங்கி தந்தால் இதே போன்று ஒரு பிரம்மாண்ட இணைப்பு விழாவை டெல்டாவில் நடத்தி மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுறோம். காலை 6.30 மணி முதல் இந்த அரங்கமே நிரம்பியிருந்தது. இப்போது ஆனந்தை பார்ப்பதற்காக எல்லாரும் நாற்காலிகளை விட்டுவிட்டு முன்னாடி வந்துவிட்டார்கள் என விஜயபாஸ்கர் கூட்டம் கலைந்ததை சமாளித்து பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications