கண் அசைக்கும் மோடி.. காய் நகர்த்தும் அமித் ஷா.. திட்டம் போடு இறங்கும் பாஜக! அடுத்த பிளான் இதுதான்
ஹைதராபாத்: இப்போது தான் 5 மாநில தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில், பாஜக தனது எதிர்கால திட்டத்தைக் கருத்தில் கொண்டு காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டது. குறிப்பாகத் தெலுங்கு பேசும் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் இப்போது நடக்கும் காங்கிரஸ் ஆட்சியை காலி செய்துவிட்டு, அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக திட்டம் போட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அசைக்கவே முடியாத அளவுக்கு இருந்த மம்தாவின் கோட்டையை பாஜக அடித்துத் தகர்த்துள்ளது. பாஜகவின் அடுத்த பார்வை இப்போது தெலுங்கானா பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 2023 முதல் தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சூழலில் தெலுங்கானாவை எப்படியாவது தாமரையை மலர வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது.

பாஜக போடும் பிளான்
தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் கூட இப்போதே பாஜக தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனைப்படி முதற்கட்டமாக மாநில அளவில் தொடங்கி முதல் கிராமம் வரை கட்சி அமைப்பை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய நிர்வாகிகள் நியமனம், பூத் அளவிலான கட்டமைப்பு மற்றும் தொண்டர்களுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை கூட தெலுங்கானாவில் பாஜகவுக்கு கோஷ்டி பூசல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் அதுபோல எதுவும் நடக்காமல் இருக்க தேசியத் தலைமை முயற்சி எடுத்து வருகிறது. இதனால் மூத்த தலைவர்களுக்குக் கட்சி அல்லது மத்திய அரசில் முக்கிய பொறுப்புகள் வழங்கி அனைவரையும் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காரணம்
தெலுங்கானா தான் அடுத்த டார்கெட் என பாஜக கருத சில காரணங்கள் இருக்கவே செய்கிறது. முதலில் பிஆர்எஸ் (BRS) கட்சியின் பலவீனம் காரணமாக அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும் பாஜக கருதுகிறது. இப்போதே ஆங்காங்கே ரேவந்த் ரெட்டி அரசுக்கு எதிராக முணுமுணுப்புகள் கேட்க தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் அது அதிகரித்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்ப்பு மனநிலை வலுவாக இருக்கும் என நினைக்கிறது. இதை பயன்படுத்தி மாநிலத்தில் மாற்று சக்தியாக உருவெடுக்க முயல்கிறது.
ஆட்டம் ஆரம்பம்
மேற்கு வங்கத்தில் பின்பற்றிய கட்சி அமைப்பு சார்ந்த தேர்தல் வியூகத்தை.. தெலங்கானாவிலும் செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தொகுதி வாரியாக திட்டமிட்டு 2028 தேர்தலை எதிர்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இனி வரும் காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அதிகளவில் தெலுங்கானாவுக்குச் செல்வார்கள். பல புதிய திட்டங்கள். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. முதற்கட்டமாகச் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் தெலுங்கானாவுக்குச் சென்றிருந்தார்.
காங்கிரஸ் பதிலடி
தெலுங்கானாவில் 2028ல் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதில் பாஜகவே வென்று ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி தரும் விதமாகவே ரேவ்ந்த ரெட்டியின் இப்போது பேசியுள்ளார்.. ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, "நிதின் நபின் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நாங்கள் தான் தெலுங்கானாவில் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள்.
மேற்கு வங்கத்திலும் அவர்கள் பல ஆண்டுகள் இதை தான் சொன்னார்கள். ஆனால், அங்கு கால் பதிக்கவே அவர்களுக்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டது. தெலுங்கானா மக்களும் சரியான பதிலையே தருவார்கள். பாஜகவின் அரசியல் திட்டங்களுக்குத் தெலுங்கானா ஒருபோதும் அடிபணியாது" என்றார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தைக் காட்டி மட்டுமே வாக்குக் கேட்பதை நிறுத்திவிட்டு, தங்களது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை முன்வைத்து பாஜகவினர் வாக்கு கேட்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார். மேலும் வரும் 2028ஆம் ஆண்டில் தெலுங்கானாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜகவினர் பகல் கனவு காண்பதாகவும் சாடியிருந்தார்.














Click it and Unblock the Notifications