திமுக தயவில் துரை வைகோ வெற்றி... விஜய் ஆட்சியை பிடித்த ரகசியம் இதுதானா? போட்டுடைத்த டிடிவி தினகரன்
சென்னை: தமிழக அரசியல் களம் சூடு குறையாமல் உள்ளது.. நேற்று வரை கைகோர்த்து உலா வந்தவர்கள், இன்று நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சிகளை கண்ணெதிரே நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன், மதிமுக கைகோர்த்துள்ள விவகாரம் தான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது..!!
நீண்டகாலம் கழித்து, 2019 லோக் சபா தேர்தலின்போது, ஸ்டாலினுடன் கரம் கோத்து மீண்டும் திமுக பக்கம் வந்தார் வைபேகா.. அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தல் முதல் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை கூட்டணி தொடர்ந்தார்.. இப்போது வெளியேறி தவெக பக்கம் செல்வதாக அறிவித்திருக்கிறார்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டு சென்றுள்ளார்.. அத்துடன் வருங்காலங்களில் தவெக-வுடன் கூட்டணி சேர்ந்து அரசியல் செய்வோம் என்றும் சொல்லிஉள்ளார்..
இதையடுத்து "திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதால், எம்பி பதவியை துரை வைகோ ராஜினாமா செய்ய வேண்டும்" என்று திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு துரை வைகோ பதிலளிக்கும்போது, "ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்து தேர்தலை சந்தித்த திமுகவுக்கு, குதிரை பேரம் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள், திமுகவில் இருக்கும் அத்தனை எம்பிக்களையும் முதலில் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்" என்று பதில் சவால் விடுத்துள்ளார். துரை வைகோவின் இந்த பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்த கொண்டிருக்கிறது.
வைகோ திமுக மீது விமர்சனம்
மறுபுறம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த கால ஆட்சியில் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார்கள். ஒரு சதுர அடி நிலத்துக்கு இவ்வளவு என்று கமிஷன் வசூலிக்கும் நிலை இருந்தது. கமிஷன், கட்டிங், கரப்ஷன் என அனைத்தும் அன்றைய ஆட்சியில் மலிந்து கிடந்தது.
நான் திமுக கூட்டணியில் இருந்தபோது, கூட்டணிக்குள் இருந்து கொண்டே அந்த ஆட்சியை விமர்சிப்பது அயோக்கியத்தனம், அரசியல் தர்மமும் இல்லை என்பதால் அமைதியாக இருந்தேன். அதுதான் நாகரிகமான அணுகுமுறை. இப்போது உண்மைகளைப் பேசுகிறேன்" என்றார்..
டிடிவி தினகரன் விமர்சனம்
மதிமுகவும் தவெகவும் இணைந்து திமுகவை சாடி வரும் நிலையில், இந்த புதிய கூட்டணியை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்க்கு மக்கள் யாரும் தனிப் பெரும்பான்மை கொடுத்துவிடவில்லை. அவர் சினிமாவில் பிரபலமானவர் என்பதால் மட்டுமே தவெகவுக்கு தனிப்பெருங்கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் கையில்தான் ஆட்சி அதிகாரத்தின் கடிவாளத்தை கொடுத்து வைத்துள்ளனர்.
நடுத்தெருவில் விடுவாரா விஜய்
துரை வைகோவின் வெற்றிக்கு முழுமுதற் காரணமே திமுகதான். அப்படி திமுக தயவில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவை வைத்துக்கொண்டுதான் விஜய் இப்போது ஆட்சி அமைத்துள்ளார்" என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், "அதிமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு தாவியவர்களை, விஜய் இறுதியில் நடுரோட்டில் தான் நிறுத்தப்போகிறார்" என்றும் எச்சரித்துள்ளார்.
மேற்கண்ட இந்த நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் நாம் கருத்து கேட்டோம்.. அவர்கள் சொல்லும்போது, "டிடிவி தினகரன் சொல்வதிலும் ஒரு அரசியல் யதார்த்தம் இருக்கவே செய்கிறது. ஒரு கட்சியின் சின்னத்திலும், கூட்டணியின் பலத்திலும் வெற்றி பெற்றுவிட்டு, திடீரென தடம் மாறுவது விமர்சனங்களுக்கு உள்ளாவது இயற்கைதான்.
விமர்சகர்கள் கருத்து என்ன
அதே நேரத்தில், மதிமுக தொண்டர்களைப் பொறுத்தவரை, தங்களுக்கு திமுகவில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதனால், விஜய்யுடன் கூட்டணி அமைத்ததை அவர்கள் ஒரு புதிய துவக்கமாகவே பார்க்கிறார்கள்.
விஜய் யாரையும் நடுத்தெருவில் விட்டுவிடுவாரா என்பதை இப்போதே கணித்துவிட முடியாது. அரசியல் என்பது லாப நஷ்ட கணக்குகளைப் பொறுத்தது. தேர்தல் நெருங்கும் வேளையில், தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக, மதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இருக்கின்றன. வரும் நாட்கள் தான் இந்த கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்" என்று நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications