சி.விஜய்பாஸ்கரை மேடையில் வைத்துக்கொண்டு.. பண அரசியலை தூக்கி எறிந்த தவெக என பேசிய ஆதவ் அர்ஜுனா!
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் இன்று தவெகவில் இணைந்தனர். இந்த விழாவில், குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சி.விஜயபாஸ்கரை வைத்துக்கொண்டு.. தவெக பண அரசியலை தூக்கி எறிந்த கட்சி என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "இங்கு வந்திருக்கும் இளைஞர்களை பார்க்கும்போது.. புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு கூட்டத்தை பார்ப்பதை போல இருக்கிறது. தமிழக அரசியல் களம் 1967க்கு முன்பு பின்பு என்று இருந்ததை போல.. இப்போது தமிழக அரசியல் களம் 2026க்கு முன்பு பின்பு என மாறியிருக்கிறது.

பண அரசியல்
நாம் இணைந்து பணி செய்ய வேண்டும். 75 ஆண்டு கால பண அரசியலை தூக்கி எறிந்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். தற்போது நடப்பது குதிரை பேரம் என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் முன்கூட்டியே இதை சொல்லிவிட்டோம். ஒட்டு மொத்த அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகிறது என்று. இப்போது அது நடந்துக்கொண்டிருக்கிறது. இரண்டு விஜயபாஸ்கர்கள் இணைந்ததன் மூலம் இந்த இணைவு 60% நிறைவடைந்திருக்கிறது. இன்னும் 30% நடக்க வேண்டி இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
அவர் பேசினது எல்லாம் ஓகேதான். ஆனால், சி.விஜயபாஸ்கர் மீது இருக்கும் வழக்கை மறந்துட்டு.. பண அரசியலை தவெக தூக்கி போட்டுவிட்டது என்று பேசியது எல்லாம் ரொம்ப ஓவர் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சி.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள்
சி.விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது.. குட்கா நிறுவனத்திடமிருந்து மாதம் ரூ.14 லட்சம் லஞ்சம் வாங்கினார் என சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருக்கிறது. இது இல்லாமல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையும் இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது. இதில் முக்கியமானது, ரூ.35 கோடி அளவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான்.
கனிம கொள்ளை சர்ச்சை
இது போக கனிம கொள்ளை குற்றச்சாட்டிலும் விஜயபாஸ்கர் சிக்கியிருக்கிறார். அவருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கனிமம் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாக புகார் இருக்கிறது. மேலும், தனியார் மைனிங் நிறுவனத்திடமிருந்து ரூ.85 கோடி பெற்றிருக்கிறார் என்று வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
ஓவராக இல்லையா?
இதையெல்லாவற்றையும் விட உச்சம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டிருந்தது. போதாத குறைக்கு.. இவருக்கு சொந்தமான இடத்தில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதெல்லாம் தெரிந்த பின்னரும், இவ்வளவு குற்றச்சாட்டு உள்ள நபரை கட்சியில் இணைத்துக்கொண்டு தவெக பண அரசியலை தூக்கி எறிந்துவிட்டது என்று பேசுவதெல்லாம் ரொம்பவும் ஓவர் என்று பல்வேறு தரப்பினர்களும் விமர்சித்திருக்கின்றனர்.













Click it and Unblock the Notifications