அறிவாலயத்தில் திடீர் ட்விஸ்ட் தந்த தேமுதிக! திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்! லிஸ்ட் இதோ!
சென்னை: திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக இணைந்துள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்ற பட்டியலை பார்ப்போம்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் திமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது. வரும் சட்டசபை தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி என கமல்ஹாசன் அறிவித்துள்ளது.
அது போல் இந்த சட்டசபை தேர்தலில் புதிய கட்சி திமுக கூட்டணியில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.
தேமுதிகவோ 14 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா தொகுதியை கேட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுக இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து இதே கோரிக்கையுடன் அதிமுகவையும் தேமுதிக அணுகியிருந்தது. அவர்களுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகள் கொடுக்கப்படும் என்றனராம்.
இந்த நிலையில் தேமுதிக தனது மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியதில் அவர்கள் எல்லாம், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக 2 சட்டசபை தேர்தல், 2 மக்களவைத் தேர்தல்களில் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
இதனால் கட்சியினர் துவண்டு போயுள்ளனர். அவர்கள் உற்சாகமடைந்து தேமுதிக வளர்ச்சியடைய திமுக கூட்டணிக்கு செல்லலாம் என அறிவுறுத்தியிருந்தனராம். இதை ஏற்ற தேமுதிக, இன்று திமுக கூட்டணியில் இணைந்தது.
தேமுதிகவின் வருகையை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அவர் தனது ட்விட்டரில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk
அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
காங்கிரஸ்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தேமுதிக
மதிமுக
இந்திய கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மக்கள் நீதி மய்யம்
மனிதநேய மக்கள் கட்சி
ஐயூஎம்எல்
கொங்கு மக்கள் தேசிய கட்சி
தமிழக வாழ்வுரிமை கட்சி
ஆகிய கட்சிகள் உள்ளன. ராமதாஸ் பாமக திமுகவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ராமதாஸ் பாமக வந்தால் விசிக கூட்டணியை விட்டு வெளியேறிவிடும் என்பதால் ராமதாஸ் பாமகவை கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் சேர்க்க மாட்டார் என அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டனர் என்பதை காணலாம்.
திமுக 188 இடங்களில் போட்டியிட்டது. அதாவது சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. அப்படி போட்டியிட்ட திமுக 133 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி தலா 6 இடங்களில் போட்டியிட்டு இரண்டுமே தலா 2 இடங்களில் வென்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெல்லவில்லை, மதிமுக 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. கொங்குநாடு மக்கள் தேசியகட்சி திமுக சின்னத்தில் ஒரு இடத்தில் போட்டியிட்டு வென்றது.
மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் போட்டியிட்டு வென்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டு வேல்முருகன் வென்றார். கடந்த தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, 60 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications