காலையில் சட்டசபையில் சரமாரி ரோஸ்ட்.. அடுத்த சில மணி நேரங்களில் விஜய்யை பாராட்டிய பிரேமலதா!
சென்னை: இன்று காலை தமிழக சட்டசபையில், ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டதை விமர்சித்து கொந்தளித்துப் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று மதியம் விஜய்யை பாராட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சட்டசபையில் இந்த விவகாரத்தை எழுப்பினார்.

உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும் பொழுது அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் இன்றைக்கு உங்களுடைய ராஜகுருவாக இருக்கும் ராதன் பண்டிட் என்பவரை, அரசு சிறப்பு அதிகாரியாக, அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் எனப் பேசினார் பிரேமலதா.
அப்படி உங்களுக்கு ராஜகுருவா இருந்தா.. பர்சனலா அவரை வச்சுக்கணும். அரசு உயர் பதவியிலே கொண்டுவந்து, உங்ளை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்க? வருங்கால இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் இதன் மூலம் என்ன மெசேஜ் நீங்க சொல்றீங்க என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்" என்று பேசினார் பிரேமலதா.
பிரேமலதாவுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், "ஜோதிடர் நியமனம் தொடர்பான முடிவை அரசு மீண்டும் பரிசீலனை செய்யும்" என்று உறுதி அளித்தார். இந்த நிலையில், ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. இன்று சட்டசபையில் இந்த விவகாரம் சூடான விவாதங்களை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை ரத்து செய்துள்ளார் முதல்வர் விஜய். இதையடுத்து விஜய்யின் செயல்பாட்டை பிரேமலதா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தேமுதிக சார்பாக மனமார்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவரை அரசு பணியில் நியமித்ததைக் கண்டித்து, இன்று சட்டப்பேரவையில் நான் எடுத்துரைத்த கருத்திற்கு உடனடியாக நியமன ஆணையை ரத்து செய்த தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும், தமிழக அரசின் உடனடி நடவடிக்கைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications