வடசென்னை... எம்ஜிஆர் முதல் விஜய் அஜித் வரை... 53 ஆண்டுகள் தியேட்டர் மூடப்பட்டது!!
சென்னை: வடசென்னையில் தண்டையார்பேட்டையில் கடந்த 53 ஆண்டுகளாக இயங்கி வந்த சினிமா தியேட்டர் இன்று மூடப்பட்டது. மோசமான வசூல் மற்றும் பல்வேறு காரணங்களால் அகஸ்தியா தியேட்டரை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மூடுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தியேட்டர் 1004 இருக்கைகள் கொண்டது. 1967 ஆம் ஆண்டு, மார்ச் 9 ஆம் தேதி இந்த தியேட்டர் திறக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முதல் தற்போதைய நடிகர்கள் விஜய் அஜித் வரை அனைவரது படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளது. மறைந்த திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்திரனின் பாமா விஜயம் தான் இந்த தியேட்டரில் வெளியான முதல் தமிழ் படம்.

இந்த தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் 300 நாட்களும், போக்கிரி 150 நாட்களுக்கும் மேல் ஓடியுள்ளன.
இதுகுறித்து இந்த தியேட்டரின் மேலாளர் வெங்கட்ராமன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்திருக்கும் பேட்டியில், ''இந்த தியேட்டரில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல் ஹாசன் படங்களும் திரையிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் இருப்பவர்கள் இந்த தியேட்டரைத்தான் தேர்வு செய்வார்கள். டால்பி ஆடியோவுடன் 70 எம்எம் ஸ்கிரீன் கொண்டது. 2010 வரை இந்த தியேட்டர் பாப்புலராக இருந்தது. பின்னர் பல காரணங்களால் வருமான இழப்பு ஏற்பட்டது.
இந்த தியேட்டரை ஏசி செய்யவில்லை. பெரிய ஃபேன்கள்தான் உள்ளன. இதனால் பெரிய படங்களை இழக்க நேரிட்டது. மேலும் இந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டப்பட்டு வந்ததால், இங்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டு இருந்தது. இதனால், தாங்களாகவே தியேட்டருக்கு வருபவர்களின் கூட்டம் குறைந்தது. அப்போதெல்லாம் பல தியேட்டர்களில் பால்கனி, பாக்ஸ் கிடையாது. தியேட்டர் துவங்கிய நாளில் கட்டணம் வெறும் ஒரு ரூபாய் பத்து பைசாதான்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications