‛தீபாவளி’.. சென்னையில் இருந்து பிற இடங்களுக்கான ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணம் அறிவிப்பு.. முழு லிஸ்ட்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்த தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கான டிக்கெட் கட்டண தொகை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்(நவம்பர்) 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த வேளையில் ஆம்னி பஸ்களில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குறிப்பாக வழக்கத்தை விட பலமடங்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு அதிக கட்டணம் கொடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலை உள்ளது. இந்நிலையில் தான் தீபாவளி பண்டிகைகயையொட்டி ஆம்னி பஸ்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
அதோடு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆயுத பூஜையையொட்டி பல இடங்களில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களை தமிழக அரசு பறிமுதல் செய்தது.
இதனால், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் ஸ்டிரைக் நடத்தினர். இதற்கிடையே தான் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், கடந்த செப்டம்பரில் சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்தை விட ஐந்து சதவீதம் குறைவாக வசூலிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக ஆம்னி பஸ்களில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயங்கும் ஆம்னி பஸ்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணம் என தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
சென்னை-நாகர்கோவில் இடையே குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,211 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.3,765 ஆகவும் உள்ளது. சென்னை-நெல்லை இடையே குறைந்தபட்ச கட்டணம் ரூ.1960 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.3,268 ஆகவும் உள்ளது. சென்னை -மதுரை இடையே குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,363, அதிகபட்ச கட்டணம் ரூ.1,895 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை-தென்காசிக்கு குறைந்தபட்சமாக ரூ.1975, அதிகபட்சமாக ரூ.3,292ம், சென்னை-விருதநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.1,756, அதிகபட்சமாக ரூ.2,926, சென்னை-தேனி குறைந்தபட்சமாக ரூ.1,630, அதிகபட்சமாக ரூ.2,717 என டிக்கெட் கட்டணம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை-திருச்சி குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,325 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,841 ஆகவும், சென்னை-சேலம் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,363 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,895 ஆகவும், சென்னை கோவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,725 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.2,875 ஆகவும், சென்னையில் இருந்து ஈரோடுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,276, அதிகபட்சமாக ரூ.2,127 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதுவிர சென்னை - தஞ்சாவூருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,097, அதிகபட்சமாக ரூ.2,665, சென்னை -நாகப்பட்டினத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.972, அதிகபட்சமாக ரூ.1,620, சென்னை -சிதம்பரத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.690, அதிகபட்சமாக ரூ.1,150 , சென்னை-பாண்டிச்சேரிக்கு குறைந்தபட்சமாக ரூ.502, அதிகபட்சமாக ரூ.836 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும்சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரூ.4154, விசாகப்பட்டினத்துக்கு ரூ.4,258 ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
****















Click it and Unblock the Notifications