ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து? ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு சொன்ன வார்னிங்!
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை இனி கணினிகளே செய்துவிடும் என்ற பேச்சு தீவிரமாக எழுந்துள்ளது. குறிப்பாக, பல லட்சம் இளைஞர்கள் சார்ந்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான 'ஜோஹோ' நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்துள்ள ஒரு கருத்து, தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் சாப்ட்வேர் கோடிங் பணிகளை பெருமளவில் ஏஐ-யே செய்துவிடும் என்றும், இதனால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் அபாயம் உள்ளது என்றும் அவர் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

விவாதம் தொடங்கியது எப்படி?
சமீபத்தில், எக்ஸா ஏஐ லேப்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வில் பிரிக் என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், மனிதர்களை விடவும் கணக்கு போடுவதில் செயற்கை நுண்ணறிவு மிக விரைவாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மனிதர்களின் மூளை சிக்கலான குறியீடுகளைக் கையாள இயற்கையாகப் பழக்கப்படவில்லை. ஆனால், புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் 2027-ஆம் ஆண்டுக்குள் மிகச் சிறந்த கணித மேதைகளை விடவும் ஏஐ அதிவேகமாகச் செயல்படும் என்று அவர் கூறியிருந்தார். வில் பிரிக்கின் இந்தப் பதிவு இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு விவாதத்தைக் கிளப்பியது.
கணிதத்தில் இருந்து கோடிங் வரை: ஸ்ரீதர் வேம்புவின் பார்வை
வில் பிரிக்கின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஸ்ரீதர் வேம்பு, இந்த விவாதத்தை சாப்ட்வேர் துறைக்கும் நீட்டித்துப் பேசினார். இது தொடர்பாக அவர் தனது பார்வையை எளிய உதாரணங்களுடன் விளக்கினார்.
"செஸ் அல்லது கோ போன்ற board விளையாட்டுகளில் மிகச் சிறந்த நகர்வுகளை யோசித்து ஆடுவது போன்ற கணிதப் பகுதிகளை ஏஐ எளிதாகக் கைப்பற்றிவிடும். அது இப்போது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால், மனிதர்களுக்குப் பிடிக்கும் வகையில் முற்றிலும் புதிதாக ஒரு விளையாட்டைக் கண்டுபிடிப்பது போன்ற படைப்புத் திறன் வாய்ந்த வேலைகளைச் செய்வது மிகவும் கடினம். மனிதர்களும்கூட அதை எப்போதாவதுதான் செய்கிறார்கள்" என்று வேம்பு குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக அவர் சாப்ட்வேர் கோடிங் பற்றிப் பேசிய விஷயம்தான் பலரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. "பெரும்பாலான சாப்ட்வேர் கோடிங் பணிகளை இனி ஏஐ மிகத் துல்லியமாகவும் சரியாகவும் எழுதிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார். கணக்கில் தேற்றங்களைச் சரிபார்க்கும் லீன் போன்ற அமைப்புகள், ஏஐ எழுதும் கோடிங்கையும் சரிபார்க்கப் பயன்படும் என்பதால் பிழைகள் இல்லாமலேயே வேலைகள் முடிந்துவிடும் என்பது அவரது வாதம்.
அப்படியானால் மனிதர்களின் நிலை என்ன?
முழுக்க முழுக்க எல்லாவற்றையும் ஏஐ மட்டுமே செய்துவிடும் என்று ஸ்ரீதர் வேம்பு கூறவில்லை. மனிதர்களின் உதவி நிச்சயம் தேவைப்படும். ஆனால், எத்தனை மனிதர்கள் தேவைப்படுவார்கள் என்பதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி.
"முக்கியமான கேள்வி என்னவென்றால், இனி வரும் காலங்களில் சாப்ட்வேர் வேலைகளுக்கு எத்தனை மனிதர்கள் தேவைப்படுவார்கள் என்பதுதான். தற்போதைய நிலவரப்படி இதற்கான பதில் மிகவும் கவலை அளிப்பதாகவும் மனதை உலுக்குவதாகவும் இருக்கிறது" என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
முன்பு பத்து பேர் செய்த ஒரு கோடிங் வேலையை, இனி ஏஐ உதவியுடன் ஒரே ஒரு நபர் செய்து முடித்துவிட்டால், மீதமுள்ள ஒன்பது பேரின் வேலை நிலை என்னவாகும் என்ற எளிய எதார்த்தத்தையே அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தொழில்துறையினருக்கே விழுந்த சவால்
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தை வழிநடத்தும் ஒரு முக்கியத் தலைவர், இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த மாற்றத்தை எதிர்கொள்வது எளிதல்ல என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
"சாப்ட்வேர் துறையில் இருக்கும் நாம் அனைவருமே, இந்தத் துறையில் தொடர்ந்து நீடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் மீண்டும் எனது வேலைக்குத் திரும்புகிறேன். தயவுசெய்து எங்களுக்காக வாழ்த்துங்கள்" என்று அவர் தனது பதிவை முடித்துள்ளார்.
சாப்ட்வேர் நிறுவனங்களின் தலைவர்களுக்கே இந்த மாற்றத்தின் முடிவு என்னவாகும் என்பது முழுமையாகத் தெரியவில்லை என்பதையே அவரது வார்த்தைகள் உணர்த்துகின்றன. இனி வெறும் கோடிங் மட்டும் தெரிந்திருந்தால் போதாது; புதிய திறன்களையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொண்டால் மட்டுமே ஐடி துறையில் நிலைத்து நிற்க முடியும் என்ற நிதர்சனத்தை இந்த எச்சரிக்கை தெளிவாக எடுத்துரைக்கிறது.


Click it and Unblock the Notifications
