இந்திய ஐடி துறை மொத்தமாக காலி? AI உருவாக்கும் மிக பெரிய பிரச்சனை.. ஸ்ரீதர் வேம்பு நேரடி எச்சரிக்கை
சென்னை: இந்த ஏஐ காலத்தில் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்தியாவின் மிக பெரிய சவாலாக இருக்கும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக, ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்களை அதிகளவில் வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக, ஏஐ கட்டமைப்புகள் மற்றும் டேட்டா சென்டர்களில் முதலீட்டை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் எந்த பக்கம் திரும்பினாலும் இப்போது ஏஐ குறித்த பேச்சுகளே இருக்கிறது. ஏஐ வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அது பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை குறைத்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் மிக பெரியளவில் குறைந்து வரும் சூழலில் இது தொடர்பாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

ஸ்ரீதர் வேம்பு
இதற்கிடையே ஏஐ தொடர்பாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சில முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே மிக பெரிய பிரச்சனையாக இருக்கும் என ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டார். சர்வதேச பொருளாதார சூழல் மிகவும் நிச்சயமற்றதாக மாறியுள்ள நிலையில், நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிக பெரிய சவாலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஜோஹோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய ஐடி நிறுவனங்கள் சமீப காலங்களில் பெரியளவில் ஆட்குறைப்பு எதையும் செய்யவில்லை என்றாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பெரிய முன்னேற்றம் இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும், "நாங்கள் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அதேநேரம் புதிய வேலைகளும் அதிகமாக உருவாகவில்லை. இதுதான் உண்மை நிலை.
வேலைவாய்ப்புகள்
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், முன்பு புதிய ஊழியர்களை நியமிக்க பயன்படுத்தப்பட்ட நிதி தற்போது AI கட்டமைப்புகள், டேட்டா சென்டர்கள், சர்வர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. குறிப்பாக சர்வர்கள் மற்றும் மெமரி சாதனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் ஐடி நிறுவனங்கள் அதற்காக அதிக முன்னுரிமை தர வேண்டி இருக்கிறது.
AI மூலம் சாப்ட்வேர்களை மிக வேகமாக உருவாக்க முடிகிறது. ஆனால் உலக சந்தைக்கு இன்னும் அதிகமான சாப்ட்வேர்கள் உண்மையிலேயே தேவையா? என்ற கேள்வி வந்துவிட்டது. தற்போது சாப்ட்வேர் துறை ஒரு கமாடிட்டி சந்தையாக மாறி வருகிறது. வளர்ச்சிக்கான போட்டியைவிட தரம், நம்பகத்தன்மை மற்றும் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு போன்ற அம்சங்களே முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ளன.
ஏஐ முதலீடுகள்
பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களின் செலவுகளை AI துறையிலேயே முதலீடுகளாக செய்து வருகின்றன. வேகமாக வளர்ந்து வரும் பல AI நிறுவனங்கள் கடன் வாங்கி மிக பெரிய அளவில் கட்டமைப்பு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தாலும் அதற்கேற்ப எதிர்காலத்தில் லாபம் கிடைக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது" என்றார்.
உற்பத்தி துறை
ஐடி துறையை தாண்டியும் கூட இதர துறைகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் சவாலாக இருப்பதாக ஸ்ரீதர் வேம்பு கூறினார். உற்பத்தி துறையிலும் கூட ஆடோமேஷன் அதிகரித்து வருவதால் மனித உழைப்பின் தேவை குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும், "வேலைவாய்ப்புகள் இதுபோல குறைந்து வரும் சூழலில், இந்த இடைவெளியை எந்த துறை நிரப்பப் போகிறது? உற்பத்தி துறைகளில் கூட ஆடோமேஷன் காரணமாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.
ஆடோமேஷன்
அதே நேரத்தில் ஆடோமேஷன் என்பது பொருளாதார ரீதியாக நல்ல பலன்களையே தருகிறது. உற்பத்தி செலவுகள் குறைவதால் பல பொருட்கள் மலிவாக மக்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த மலிவான பொருட்களை வாங்கும் அளவுக்கு மக்களுக்கு வருமானம் கிடைக்குமா என்பதே இப்போது மிக பெரிய கேள்வியாக உள்ளது" என்றார்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இளைஞர்களுக்கு ஐடி துறையே கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்த நிலையில், அதுவே சிக்கலில் இருப்பதாக ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
