NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு அதிமுக 27 இடங்களை ஒதுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது காங்கிரஸ் கட்சியை காட்டிலும் ஒரு தொகுதி குறைத்து பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகிறது. மே மாதம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 28 தொகுதிகள், மதிமுக - 4 தொகுதிகள், மமக- 2 தொகுதிகள்,
ஐயூஎம்எல்- 2 தொகுதிகள், கொமதேக- 2 தொகுதிகள் என ஆக மொத்தம் 234 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் விசிகவுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த போதிலும் இதுவரை அதிமுகவில் தொகுதி பங்கீடு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு மொத்தம் 27 இடங்கள் ஒதுக்கியதாகத் தெரிகிறது. 40, 50 என அதிமுகவிடம் பாஜக கேட்டிருந்ததாக செய்திகள் வந்த நிலையில் 27 தொகுதிகள் ஒதுக்கீடு என்பது ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் அரசியல் கணக்குகளைப் பலப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட பாஜகவிற்கு ஒரு இடம் குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
உத்தேசத் தொகுதிகள் என்னென்ன?
பாஜக போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் 27 தொகுதிகளில் சில முக்கிய இடங்கள் இதோ:
கொங்கு மண்டலம்: கோவை வடக்கு, ஒசூர், ஊட்டி, அவிநாசி.
தென் மண்டலம்: நாகர்கோவில், மதுரை தெற்கு.
சென்னை: வேளச்சேரி, தியாகராய நகர் (T. Nagar). உள்ளிட்டவை ஆகும்.
குறிப்பாக, பாஜக வலுவாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத் தொகுதிகளில் அக்கட்சி அதிக கவனம் செலுத்தியுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்
இருப்பினும், இந்தத் தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமானவை அல்ல. அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான குழுக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், "உறுதி செய்யப்படாத" தகவல்களாகவே இவை வலம் வருகின்றன.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காண்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இந்தத் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸை விடக் குறைவான தொகுதிகள் என்ற தகவல் உண்மை எனில், அது கூட்டணியின் பேச்சுவார்த்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications