திமுகவின் பரம எதிரி! அதிமுகவை விட்டு பிரிந்த அன்வர் ராஜா! தவெகவிற்கு போகாதது ஏன்? இப்படி ஒரு காரணமா?
சென்னை: அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்தவர் அன்வர் ராஜா. மிக தீவிரமாக திமுகவை தொடக்க காலத்தில் இருந்தே எதிர்த்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து வெளியேறியதும் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவை கடுமையாக எதிர்த்து வந்த அன்வர் ராஜா.. தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் செல்வதை பற்றி யோசிக்ககூடவில்லை.. இதற்கு பின் சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமையாக அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தீவிர திமுக எதிர்ப்பாளர்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, 1986-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது திமுக ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதிமுகவுக்கு இது ஒரு சவாலாகவே இருந்தது. இருப்பினும், அன்வர் ராஜா தேர்தலில் வெற்றி பெற்றார். அன்வர் ராஜா அப்போதில் இருந்தே தீவிர திமுக எதிர்ப்பாளர்.
அன்வர் ராஜா, மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், எம்.ஜி.ஆர் அவரை உரையாற்ற அழைத்தார். மேலும், அதிமுகவின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவில் சேர்த்துக் கொண்டார். அந்தக் குழுவில் 13 பேர் அமைச்சர்களாக இருந்தனர், அன்வர் ராஜாவும், ஜெயலலிதாவும் அமைச்சர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர் அன்வர் ராஜா.
அன்வர் ராஜா 2001ல் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தமிழக சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இவர் தமிழக அரசில் இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக 16ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2014 தேர்தலில் இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக பணியாற்றியவர் அன்வர் ராஜா.
அப்போது எம்ஜிஆர் பார்த்து வளர்ந்தவர் என்பதால் அப்போதில் இருந்த அன்வர் ராஜா தீவிரமாக திமுகவை எதிர்த்தவர்.. இப்போது அதே திமுகவில் இணைந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் அவர் பாஜக கூட்டணியில் இல்லாத தமிழக வெற்றிக் கழகம் பக்கம் செல்லவில்லை.
1. தமிழக வெற்றிக் கழகம் திமுகவை கடுமையாக எதிர்க்க கூடிய கட்சிதான். அன்வர் ராஜாவிற்கு ஏற்ற கொள்கை இருந்தாலும்.. அவர் அங்கே செல்லவில்லை.
2. இதற்கு காரணம் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறினாலும்.. பாஜகவை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர் மத்திய அரசை விமர்சிக்கும் அறிக்கைகளில் கூட திமுகவைத்தான் கடைசியில் விமர்சனம் செய்கிறார். பாஜகவை பெரிதாக தாக்குவது இல்லை.
3. பாஜகவை பல இடங்களில் நேரடியாக விஜய் அட்டாக் செய்வது இல்லை.
4. அதோடு தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்கிறார்கள். ஒரு பிரம்மாண்ட கட்சி அதிமுகவிற்கு வருவதாக எடப்பாடி கூறி இருப்பது இதே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அன்வர் ராஜா தமிழக வெற்றிக் கழகத்திற்கு போய்.. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது தர்மசங்கடமாக இருக்கும்.
5. அதோடு தமிழக வெற்றிக்கழகம் சிறிய கட்சி. இன்னும் நிரூபிக்காத கட்சி. அப்படிப்பட்ட கட்சியில் எதிர்காலமும் இல்லை.
6. திமுகவில் அதிமுகவில் இருந்து வந்த சேகர் பாபு தொடங்கி செந்தில் பாலாஜி வரை பலர் பெரிய அளவில் மரியாதை பெறுகின்றனர். முக்கிய பொறுப்புகளையும் பெறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அன்வர் ராஜாவிற்கு இது பெரிய அளவில் நல்வாய்ப்பாகவும் இருக்கும்.. என்பதால் அன்வர் ராஜா திமுக பக்கம் சென்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications