டிடிவி, அன்புமணி, அண்ணாமலை, ஓபிஎஸ்.. திட்டமிட்டு காய் நகர்த்திய எடப்பாடி.. களத்தில் ஓரம்கட்டிய பாஜக!
சென்னை: என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோரை தொடர்ந்து அண்ணாமலையும் தேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக கூறி இருப்பது விவாதமாகி இருக்கிறது. இந்த முடிவுகளுக்கு பின்னணியில் பல்வேறு முக்கிய காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு சிக்கல்களும், பஞ்சாயத்துகளும் நடந்து வருகின்றன. இந்த என்டிஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத சூழலில், சில சர்ச்சைகள் அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலகும் என்டிஏ தலைவர்கள்
ஏனென்றால் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் என்று தொடர்ச்சியாக கூறி வந்த டிடிவி தினகரன், திடீரென என்டிஏ கூட்டணியில் இணைந்தார். இந்த கூட்டணியில் இணைந்த அடுத்த நாளே சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். என்டிஏ கூட்டணியில் முக்கலத்தோர் சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் டிடிவி தினகரன், களத்தில் இருந்து விலகியது விவாதப் பொருளாக மாறியது.
ராஜ்ய சபா சீட் டீல்
அதேபோல் பாமகவின் அன்புமணியும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறி இருக்கிறார். இந்த இரு அறிவிப்புகளுக்கு பின்னணியில் ராஜ்ய சபா சீட் காரணமாக அமைந்துள்ளது. பாமகவின் அன்புமணிக்கு அதிமுக தரப்பில் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முடிவுக்கு அன்புமணி வந்திருக்கிறார்.
அதிமுகவின் பிளான்
மறுபக்கம் டிடிவி தினகரனுக்கு பாஜகவின் கணக்கில் இருந்து ராஜ்ய சபா சீட் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாகவே டிடிவி தினகரனும் களத்தில் இருந்து விலகி இருக்கிறார். ராஜ்ய சபா சீட் கொடுப்பதன் மூலமாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை அதிக தொகுதிகளில் போட்டியிட முடியும் என்ற பின்னணி கணக்கும் இருக்கிறது.
அண்ணாமலை அதிர்ச்சி
இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேனா என்பதை காலமும், சூழலும் மட்டுமே முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். இதன் மூலமாக அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. என்டிஏ கூட்டணியின் மூன்று முக்கியத் தலைவர்களுமே இப்படி தேர்தலில் போட்டியிடாமல் விலகுவதற்கு பின் ஒரு தந்திரம் இருப்பதாக தெரிகிறது.
காய் நகர்த்திய எடப்பாடி பழனிசாமி
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த வரை, எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க பாஜக ஒப்புக்கொண்ட பின்னரே டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். தொடர்ந்து அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய அதே நாளில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது.
எடப்பாடியின் அரசியல்
அண்ணாமலைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி போர்க்கொடி தூக்கியதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமல்லாமல் சொந்த காரணங்களும் உள்ளது. இருவருமே கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கொங்கு பகுதியில் தனக்கு நிகராக அண்ணாமலை வளரக்கூடும் என்பதை கணக்கில் கொண்டே அவரை பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்க வலியுறுத்தினார்.
இதனால் அண்ணாமலையை நீக்கிவிட்டு என்டிஏ கூட்டணியை இணக்கமாக வைக்கும் நோக்கில் பாஜக தலைமை முடிவு எடுத்தது. அதே பாணியை தான் டிடிவி தினகரன் விஷயத்திலும் பாஜக தலைமை செய்திருக்கிறது. தேவையின்றி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று டிடிவி தினகரனுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்திருக்கிறது.
தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்
அதுமட்டுமல்லாமல் அமமுக தனித்து போட்டியிட்டாலோ அல்லது தவெக பக்கம் சென்றாலோ முக்குலத்தோர் சமூக வாக்குகள் பிரியும். இதனால் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக கூறி பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இன்னொரு பக்கம் டெல்லியின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஓபிஎஸ், தற்போது தனித்துவிடப்பட்டுள்ளார்.
பாஜகவின் ஒப்புதல்
ஓபிஎஸ்க்கு அதிமுகவின் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். மறுபக்கம் பாஜகவும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஓபிஎஸ் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடமல் விலகிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் என்டிஏ கூட்டணி இணக்கமாக இருக்க தலைவர்கள் பலரும் களத்தில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications