குமுறி அழாத குறைதான்..கப்சிப் ஆன திமுக கூட்டாளிகள்! அதிமுக-பாஜக பார்த்த பயங்கர வேலை..திடீர் ட்விஸ்ட்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை திமுகவும் அதிமுகவும் மேற்கொண்டு வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்த கூட்டணியில் பிற கட்சிகள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் கூட்டணி பேரம் பேச முடியாமல் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் தவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணிக்கு பெரு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. 2026 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பாஜக கூட்டணி அமைவதற்கு முன்னால் தமிழகத்தில் ஐந்து முனை போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், விஜய் என ஐந்து முனை போட்டியிருக்கும் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் கூட்டணி பேரம் பேச தயாராக இருந்தன. ஆனால் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளன.

அதிமுக கூட்டணிக்கு செல்வோம் என்று பேசியாவது கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் சீட்டுகளை வாங்கிவிடலாம் என எதிர்பார்த்து இருந்த கட்சிகள் அதனை செய்ய முடியாமல் போய் உள்ளது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொங்குநாடு தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இருந்தன.
இதில் திமுக 175 இடங்களில் போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஆறு தொகுதிகளில் போட்டியிட்டன. சிறிய கட்சிகளுக்கு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. குறிப்பாக மதிமுக, ஆதித்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.
இந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் கூடுதலாக தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகள் வரலாம். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜயை நம்பி களமிறங்கவும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விரும்பவில்லை. அதே நேரத்தில் தங்களிடம் பேரம் பேசினார்கள், நான் கூட்டணி கதவை அடைத்து விட்டேன் என திருமாவளவன் உள்ளிட்டோர் பேசினர்.
மதிமுக வைகோவும் சீட்டு தரவில்லை என்றாலும் திமுகவுடன் தான் கூட்டணி என பேசி இருக்கிறார். இப்படியாக அதிமுக கூட்டணிக்கு செல்ல முடியாத நிலையில் திமுக தரப்பிலேயே தஞ்சம் அடைய வேண்டிய நிலை மதிமுக, விசிக, மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த முறை தந்த தொகுதிகளை மட்டுமே தர முடியும் என திமுக கறார் காட்டலாம். இல்லையே கடந்த முறையை விட இந்த முறை குறைந்த சீட்டுகளை ஒதுக்கிவிட்டு உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என அந்த கட்சிகளை நிர்பந்திக்கவும் செய்யலாம்.
கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடங்கினால் குறிப்பிட்ட அளவு தொகுதிகளை பெற்று விடலாம் என்ற உற்சாகத்தில் இருந்த திமுக கூட்டணி கட்சிகள் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியால் தவிப்பில் ஆழ்ந்துள்ளன. அதே நேரத்தில் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கூடுதல் சீட்டு கொடுத்தால் பார்ப்போம், இல்லையேல் வழக்கம் போல மூன்றாவது அணியை கூட உருவாக்கலாம் என சில கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications