“ஆம்புலன்ஸ் டிரைவரை பார்த்து நீ தவறானவன் என சொன்ன முதல் அரசியல் தலைவர் எடப்பாடி தான்”: திமுக அட்டாக்
சென்னை: "அரசியல் வரலாற்றிலேயே 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரைப் பார்த்து நீ தவறானவன் எனக் கைக்காட்டி பேசியது எடப்பாடி பழனிசாமி தான். அந்தப் பேச்சின் தாக்கம் அடுத்த கூட்டத்திலேயே எதிரொலித்துள்ளது." என திமுக மருத்துர் அணிச் செயலாளர் எழிலன் கூறியுள்ளார்.
திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதன் விளைவாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார்' எனத் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். மண்ணச்சநல்லூரில் பரப்புரையை முடித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி துறையூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பாக துறையூர் அருகே ஆத்தூர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக துறையூரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ், அதிமுக தொண்டர்கள் நின்று கொண்டிருந்த வழியாக சென்றுள்ளது.
அப்போது திடீரென ஆம்புலன்ஸை வழிமறித்த அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் கதவை திறந்து டிரைவரை தாக்க முற்பட்டனர். ஆம்புலன்ஸ் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிமுக தொண்டர்களை விலக்கி ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்பரையின்போது ஆம்புலன்ஸ் வாகனம் சென்றபோது எடப்பாடி பழனிசாமி கோபமடைந்து, இனி நான் பிரச்சாரம் செய்யும்போது ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் அதே ஆம்புலன்ஸில் நோயாளியாக போவார் என மிரட்டல் விடுத்த நிலையில் அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மருத்துவ அணிச் செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான எழிலன், "எடப்பாடி பழனிசாமி பொறுப்பின்றி பேசியதன் விளைவாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்சியை காட்டுவது என்ன வகையில் நியாயம்? எடப்பாடி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால்தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது.
எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிடுவதுதான் இதுவரை கடைபிடிக்கப்படும் மாண்பு. அரசியல் வரலாற்றிலேயே 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரைப் பார்த்து நீ தவறானவன் எனக் கைக்காட்டி பேசியது எடப்பாடி பழனிசாமி தான். அந்தப் பேச்சின் தாக்கம் அடுத்த கூட்டத்திலேயே எதிரொலித்துள்ளது.
ஆம்புலன்ஸில் சிகிச்சை அளிக்க வந்த 7 மாத கர்ப்பிணி ஊழியரை அதிமுகவினர் தாக்கி உள்ளனர். தமிழ்நாட்டைப் பாதுகாப்போம் என Rally நடத்திட்டு அடிப்படை உயிரைக் கூட பாதுகாக்கவில்லை என்றால் என்ன மாதிரியான செய்தியை நீங்கள் மக்களுக்குச் சொல்கிறீர்கள்?" என ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications