புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்
சென்னை: அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. "திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க" என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள் மீது வழக்குகள், எதிர்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்... இது அப்பட்டமான திமுக மாடல்!
அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களை சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது என சொல்லப்படுகிறது.
டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்த போது கூட, "30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்" என்று செய்தியாளர்கள் கூறிய போது கூட அதை கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர் தானே இவர்?.
மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம் தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது. ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளை கேட்கும் எதிர்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்து பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும். அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா?.
உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக் காட்டினால், அதை திருத்திக்கொள்ள பாருங்கள்; அல்லது, மறுத்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களை கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள். புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம் என்று தமிழக அரசை அதிமுக வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications