வாக்கு பதிவிற்கு பிறகு முதல் முறையாக மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக-வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு, கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுக-வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணிக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026... கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும்; கண்துஞ்சாது அயராது தேர்தல் பணியாற்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

Aiadmk Edappadi Palaniswami opens up for the first time since the voting

வாக்கு எண்ணிக்கை முடியும்வரை மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் அயராது பணியாற்றிட வேண்டுகிறேன்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவு நாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.

தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியைச் சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில், பின்வரும் முக்கிய அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 4.5.2026 அன்று, கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடைய அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே, தேர்தல் நடத்தும் அலுவலரால் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையுடன் (Identity Card) வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலதாமதமாகச் செல்லக்கூடாது.

வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு ஏற்றார்போல் முகவர்களை நாம் நியமித்திருக்கிறோம். அந்த முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற நாற்காலிகளுக்குச் சென்று அமர்ந்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே சென்றவர்கள், வாக்கு எண்ணிக்கை முடிவுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற வரையிலும், எக்காரணத்தைக் கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியே வரக் கூடாது. மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதி செய்திட வேண்டும்.

தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், ஏற்கனவே படிவம் 17C-ன்படி வாக்குப் பதிவு நாளன்று பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் சரியாக உள்ளதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள தேதியையும், நேரத்தையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தின் சீல்களும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக இருந்தால் மட்டுமே, வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும், நீங்கள் குறித்து வைத்திருக்கின்ற வாக்குகள், தேர்தல் நடத்தும் அலுவலரால் சரியாக அறிவிக்கப்படுகிறதா என்பதை கவனமுடன் பார்க்க வேண்டும்.

ஏதேனும் மாறுதல்கள் இருக்கின்ற பட்சத்தில், வாக்கு எண்ணிக்கையைத் தொடராமல் தேர்தல் நடத்தும் அலுவலரிடத்திலேயே தெரியப்படுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை, வாக்கு எண்ணும் மையத்தின் பிரதான மேஜையின் முன்பு அமர்ந்திருக்கின்ற வேட்பாளரின் தலைமை முகவரிடத்திலே தெரியப்படுத்தி, அதை எழுத்துப்பூர்வமாக வேட்பாளரின் சார்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடத்திலே கொடுத்து அதற்குகுண்டான ஒப்புகையை கட்டாயம் கேட்டுப் பெறவேண்டும். அதற்கான தீர்வு கிடைத்த பின்னர்தான், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும், மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்.

திமுக-வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு, கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுக-வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து, முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.

கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் (Counting Agent) அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வரவேண்டும்.

கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள Chief Agent-களும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கோடான கோடி மக்களின் பேராதரவோடு, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.

தமிழக மக்களைக் காப்பாற்றுவதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, புரட்சித் தலைவருக்கும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன். வெற்றி நமதே!" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+