பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி.. துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பெண்கள்! பரவும் வீடியோ!
சென்னை: சென்னையை அடுத்த படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொடுத்த அதிமுக நிர்வாகியை பெண்கள் சேர்ந்து துடைப்பத்தால் அடிக்கும் காட்சி பரவி வருகிறது. இந்நிலையில், அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. சுற்றத்தினராலேயே பெண்கள் பாதிக்கப்படும் அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில், வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்களுக்கு, வீட்டின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருபவர் பொன்னம்பலம். இவர் படப்பையில் உள்ள தனது வீட்டில் குடியிருந்து வந்த இளம்பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது வீட்டில் குடியிருக்கும் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு பொன்னம்பலம் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், அவரை துடைப்பம் கொண்டு அப்பெண்கள் அடித்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பொன்னம்பலத்தின் வீட்டில், சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயது கொண்ட 2 இளம்பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொன்னம்பலம் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த இரண்டு பெண்களும், இவரது வாடகை வீட்டிலிருந்து, வெளியேறி கீழ்படப்பை பகுதியில் மற்றொரு வாடகை வீட்டிற்கு குடியேறி உள்ளனர். ஆனாலும், அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட பொன்னம்பலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும் மேலும் சிலருடன் இணைந்து பொன்னம்பலத்தை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கி மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், பொன்னம்பலத்தை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், விசாரணை நடத்திய மணிமங்கலம் போலீசார், அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications